கை கொடுப்பாரா ராமர்?
'முதல்வர் பதவியை அடைவதற்கு என்னவெல்லாம்செய்யலாம் என, தீவிரமாக யோசித்து வருகிறார்...' என, பா.ஜ., - எம்.பி., மனோஜ் திவாரி பற்றி கிண்டல் அடிக்கின்றனர், எதிர்க்கட்சியினர். வடகிழக்கு டில்லி லோக்சபா தொகுதி எம்.பி.,யான இவர்,அரசியலுக்கு வரும் முன், போஜ்புரி மொழி திரைப்படங்களில் பிரபலமான நடிகராக இருந்தார். இவருக்கு நீண்டநாட்களாகவே டில்லி முதல்வர் பதவி மீது கண்.கட்சி மேலிடமும், இவரைமுதல்வர் பதவியில் அமர்த்தி அழகு பார்க்க விரும்பியது. ஆனால், தொடர்ச்சியாக அங்கு ஆம் ஆத்மி வெற்றி பெற்றதால், இவரால் முதல்வராக முடியவில்லை.அடுத்த சில மாதங்களில், டில்லியில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், பா.ஜ.,வில் முதல்வர் வேட்பாளராவதற்கு கடும் போட்டி நிலவுகிறது.'தற்போது, ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் முதல்வராக உள்ள ஆதிஷி, பெண் என்பதால், அவருக்கு போட்டியாக நாமும் ஒரு பெண் தலைவரை அறிவித்தால் தான் சரியாக இருக்கும்' என, பா.ஜ., மேலிட தலைவர்கள் கருதுகின்றனர். இதனால், முன்னாள் மத்திய அமைச்சரான ஸ்மிருதி இரானியை களமிறக்குவது குறித்து ஆலோசித்து வருகின்றனர். இதையறிந்த மனோஜ் திவாரி, ராமர் போல் வேடமணிந்து, பஜனை பாடல்களை பாடியபடியே, பொதுமக்களை சந்தித்து குறை கேட்டு வருகிறார். 'முதல்வர் பதவியை பெறுவதற்கு மனோஜ் திவாரிக்கு ராமர் கை கொடுப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்...' என்கின்றனர், டில்லி மக்கள்.