உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அக்கம் பக்கம் / கூட்டணி நீடிக்குமா?

கூட்டணி நீடிக்குமா?

'இப்போதெல்லாம் மிகவும் வரம்பு மீறி செயல்படுகிறார். இவருக்கு கடிவாளம் போடா விட்டால் நமக்கு தான் ஆபத்து...' என, ஆந்திர துணை முதல்வரும், ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் பற்றி கூறுகின்றனர், தெலுங்கு தேசம் கட்சியினர். ஆந்திராவில், முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம், ஜனசேனா, பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சிக்கு சட்டசபையில் பெரும்பான்மை இருந்தாலும், தேர்தலின்போது பவன் கல்யாண் தீவிரமாக பிரசாரம் செய்ததால், அவரை கவுரவப்படுத்தும் விதமாக, துணை முதல்வர் பதவியை அவருக்கு கொடுத்தார். ஆனால், பவன் கல்யாணின் ஆட்டம் வேறு மாதிரியாக உள்ளது. அரசின் அறிவிப்பு, திட்டங்களை முதல்வரை கலந்தாலோசிக்காமல் அவரே வெளியிடுவதாக, தெலுங்கு தேசம் கட்சியினர் புலம்புகின்றனர்.சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த பவன் கல்யாண், 'ராணுவ வீரர்களின் அர்ப்பணிப்பு உணர்வை கவுரவிக்கும் வகையில், ஆந்திராவில் உள்ள அவர்களது சொத்துக்களுக்கு வரி விலக்கு அளிக்கப்படும்...' என்றார். இதைக் கேட்டதும், தெலுங்கு தேசம் கட்சியினருக்கு கடும்கோபம் வந்து விட்டது. 'ராணுவ வீரர்களுக்கு சலுகை அளிப்பது வரவேற்கக்கூடிய விஷயம்தான். ஆனால், அந்த அறிவிப்பை முதல்வர் தானே வெளியிட வேண்டும். இவர் எதற்கு முந்திரிக்கொட்டை போல் பேசுகிறார்...' என, ஆத்திரப்படுகின்றனர். ஆந்திர மக்களோ, 'இந்த கூட்டணி ஐந்தாண்டுகளுக்கு நீடிக்காது போலிருக்கிறதே...' என, முணுமுணுக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி