முதல்வர் மாற்றமா?
'ஏற்கனவே பற்றி எரிகிறது; இவர் வேறு, அதில் எண்ணெய் ஊற்றுகிறாரே...' என, கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரும், பா.ஜ., மூத்த தலைவருமான அசோக் பற்றி கூறுகின்றனர், அங்குள்ள காங்கிரஸ் தலைவர்கள். கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. முதல்வர் பதவியை, அவரிடமிருந்து கைப்பற்று வதற்கு, துணை முதல்வரும், மாநில காங்., தலைவருமான சிவகுமார் நீண்ட நாட்களாக, ரகசியமாக முயற்சித்து வருகிறார்.இதனால், சிவகுமாருக்கும், சித்தராமையாவுக்கும் இடையே மோதல் நிலவுகிறது. இருவரும் வெளிப்படையாக மோதாவிட்டாலும், தங்கள் ஆதரவாளர்கள் வாயிலாக மோதுவது வழக்கமாக உள்ளது. இந்த நிலையில்தான், பா.ஜ.,வைச் சேர்ந்த அசோக், சமீபத்தில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசுகையில், 'கர்நாடகாவில் விரைவில் முதல்வர் பதவி சிவகுமார் கைக்கு போய் விடும். அதற்கான பணிகளில் அவர் மறைமுகமாக ஈடுபட்டுள்ளார். 'வரும் நவம்பர், 14 அல்லது 15ம் தேதியில், சிவகுமார் முதல்வராக பதவியேற்பார்; இது, நிச்சயமாக நடக்கும்...' எனக் கூறியுள்ளார். அவரது இந்த பேச்சு, கர்நாடக மாநில காங்கிரசுக்குள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 'முதல்வர் பதவிக்கு தேதி குறிக்க, அசோக் என்ன ஜோதிடரா...' என, காங்கிரசில் உள்ள ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.கட்சியில் உள்ள மற்றும் சிலரோ, 'ஆதாரம் இல்லாமல் அசோக் இந்த தகவலை தெரிவித்திருக்க மாட்டார். கண்டிப்பாக முதல்வர் பதவியில் மாற்றம் வரும்' என்கின்றனர்.