ஆட்சி பறிபோகுமோ?
'மறுபடியும் ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாங்க; இந்த மோதல் எங்கு போய் முடியும் என தெரியவில்லையே...' என, கர்நாடக காங்கிரசில் நடக்கும் குழப்பத்தை பார்த்து அதிர்ச்சியில் உறைந்துள்ளனர், அந்த கட்சியின் மேலிட தலைவர்கள். கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. மாநில காங்., தலைவரான சிவகுமார், துணை முதல்வராக உள்ளார். இங்கு, 2023ல் நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதுமே, முதல்வர் பதவியை பெறுவதில் சித்தராமையாவுக்கும், சிவகுமாருக்கும் கடும் போட்டி நிலவியது. இறுதியில் மேலிட தலைவர்கள் தலையிட்டு, 'முதல் இரண்டரை ஆண்டுகள் சித்தராமையா முதல்வராக இருக்கட்டும்; அடுத்த இரண்டரை ஆண்டுகள் சிவகுமார் முதல்வராக இருப்பார்...' என, சமரசம் செய்ததாக தகவல்கள் கசிந்தன. தற்போது இரண்டரை ஆண்டுகள் முடிந்து விட்டது. ஏற்கனவே அளித்த வாக்குறுதிப்படி, 'சிவகுமாரை முதல்வராக்க வேண்டும்' என, அவரது ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் போர்க்கொடி துாக்கியுள்ளனர். சித்தராமையாவோ, 'மீதமுள்ள இரண்டரை ஆண்டுகளும் நான் தான் முதல்வர்; என்னை யாரும் அசைத்துப் பார்க்க முடியாது...' என, சவால் விடுகிறார். மேலிட தலைவர்களோ, 'இவர்களுக்குள் நடக்கும் சண்டையை பயன்படுத்தி, பா.ஜ., உள்ளே புகுந்து, நம் எம்.எல்.ஏ.,க்களை துாக்கி விட்டால், ஆட்சி பறிபோய் விடுமே...' என, கவலைப்படுகின்றனர்.