உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அக்கம் பக்கம் /  குரங்குகள் தொல்லை குறையுமா?

 குரங்குகள் தொல்லை குறையுமா?

'ராணுவ அமைச்சகத்தையே நிர்வாகம் செய்பவருக்கு, குரங்குகள் தொல்லையை சமாளிப்பது பெரிய தலைவலியாக இருக்கிறதே...' என, மத்திய ராணுவ அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான ராஜ்நாத் சிங் பற்றி கூறுகின்றனர், சக அமைச்சர்கள். நம் நாட்டின் தலைநகர் டில்லியில் குரங்குகள் தொல்லை அதிகம். அதிலும், மத்திய அமைச்சக அலுவலகங்கள் அமைந்துள்ள பகுதிகளில், குரங்குகள் நடமாட்டம் மிகவும் அதிகம். மத்திய அமைச்சகங்கள் அமைந்துள்ள இடங்கள், வடக்கு பகுதி, தெற்கு பகுதி என, இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளன. நிதி மற்றும் உள்துறை அமைச்சகங்கள் வடக்கு பகுதியிலும்; ராணுவம், வெளியுறவுத் துறை அமைச்சகங்கள், தெற்கு பகுதியிலும் செயல் படுகின்றன. ராணுவ அமைச்சக அலுவலகத்துக்குள், குரங்குகள் அடிக்கடி புகுந்து விடுகின்றன. ஜன்னல், பால்கனி போன்ற இடங்களில், கம்பி வலைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றை வளைத்து உள்ளே நுழையும் குரங்குகள், கோப்புகளை கிழித்து, நாசம் செய்து விடுகின்றன. இந்த பிரச்னை குறித்து, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் கவனத்துக்கு அதிகாரிகள் எடுத்து சென்றனர். இதையடுத்து, ராணுவ அமைச்சக வளாகத்தில், குரங்குகளை விரட்டுவதற்காக தனியாக ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதைக் கேள்விப்பட்ட டில்லி மக்களோ, 'இனியாவது, குரங்குகள் தொல்லை குறையுமா...?' என, கிண்டலாக கேட்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை