எங்கள் நிறுவன வளர்ச்சியின் ஓர் அங்கம் தினமலர்
பவள விழா ஆண்டில் அடியெடுத்து வைக்கும் 'தினமலர்' நாளிதழ், எப்படி எங்கள் நிறுவன வளர்ச்சியின் ஓர் அங்கமாக இருக்கிறது என்பதை, பெருமையுடன் நினைவு கூர விரும்புகிறோம்.கடந்த 1979 டிச., 12ல் மிகச்சிறிய அளவில், ஈரோட்டில் ஒரு கதர் கடையைத் திறந்தோம். ஈரோடு கலெக்டர், எஸ்.பி., ஆகியோர் பங்கேற்ற அந்நிகழ்வுக்கு, 'தினமலர்' நிருபர் வந்திருந்தார். அவர் விழா முடியும் வரை காத்திருந்து, இந்நிகழ்வை நாளிதழில் பிரசுரிப்பதாகக் கூறி, பத்திரிகையில் விளம்பரம் செய்தால் எவ்வாறெல்லாம் வியாபாரம் சிறப்பாக வளர்ச்சியடையும் என்பதை விளக்கமாகக் கூறினார். அவர் கூறியது எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவர் கூறியதற்காக 100ரூபாய்க்கு விளம்பரம் செய்ய ஆரம்பித்து, பிறகு அது 1,000 ரூபாய் ஆகி, லட்சம் என வளர்ந்து, தற்போது பல்வேறு மீடியாக்களில் கோடிக்கணக்கான மதிப்பில், விளம்பரம் செய்து கொண்டிருக்கிறோம்.தொடர்ந்து, 1996ல் எங்களது கோவை ஷோரூமைத் துவக்கியபோது, தீபாவளி சமயத்தில் 'தினமலர்' நாளிதழில் 30 நாட்களுக்கு 30 வகையான விளம்பரம் கொடுத்து, அந்த விளம்பரங்களில் வரும் உடைகளை மக்கள் கேட்டு தேடி வர ஆரம்பித்தபோது, 1979ல் 'தினமலர்' போட்ட விளம்பரத்துக்கான விதையின் வளர்ச்சியை அறுவடை செய்தோம் என்றால், அது மிகையில்லை.அந்த பந்தம் இன்றும் தொடர்கிறது; என்றும் தொடரும்.வியாபாரத் துறையில் இருப்பதால், நாங்கள் பல்வேறு பத்திரிகைகளுடன் தொடர்பு கொண்டுள்ளோம். 'தினமலர்' பணியாளர்களைப் போல் அர்ப்பணிப்பு உணர்வுடனும், ஒழுங்கமைப்புடனும் பணியாற்றுபவர்களைக் கண்டதில்லை.'தினமலர்' டிஜிட்டல் நாளிதழின் வீச்சு மிகப் பாராட்டத்தக்கதாக உள்ளது. எங்களது வெளிநாட்டு நண்பர்களிடம் ஏதாவது விஷயமாக பேசும்போது, ஆமாம், அதை தினமலரில் படித்தோம் என சர்வ சாதாரணமாக சொல்வர். நாட்டில் நடக்கும் விஷயங்களை அவர்கள் ஆர்வமுடன், 'தினமலர்' டிஜிட்டல் நாளிதழ் மூலம் தேடித்தேடி அறிந்து கொள்கின்றனர்.நறுக்கென ஒரே வார்த்தையில் செய்திக்கான தலைப்பு, தரமான பேப்பரில் தெளிவான எழுத்துரு, தெள்ளத் தெளிவான புகைப்படங்கள், அனைவரையும் ஈர்க்கும் விதத்தில் செய்திகள், நடுத்தர, உயர்நடுத்தர வர்க்கத்தினருக்கான, அவர்களது தேவையைப் பூர்த்தி செய்யும், அவர்களது அறிவை விருத்தி செய்யும் செய்திகளுக்கு, விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியிடுவது போன்றவை, தினமலருக்கே உரித்தான தனிச்சிறப்புகள்.நாளிதழுடன் வரும் இணைப்புகள், அதில் வரும் செய்திகள், உதாரணமாக, ஆன்மிக மலரில் வரும் தகவல்களை மிகச் சிறப்பாக தொகுத்து வழங்குகின்றனர் அதற்கான சிரத்தை எடுத்துக் கொள்கின்றனர்.வாரமலரில் வரும் அந்துமணியின் தெறிக்கவிடும் கேள்வி - பதில்களுக்கு என்றே, பட்டிதொட்டி முதல் பட்டணம் வரை உள்ள மாபெரும் ரசிக பட்டாளத்தில் நாங்களும் உண்டு என்பதில் பெருமிதம். அந்துமணியின் கேள்வி - பதில்கள் மட்டுமே அடங்கிய புத்தகங்கள், புத்தக கண்காட்சி விற்பனையில் சக்கைப்போடு போடுகின்றன என அறிய வரும்போது, அவரின் பல்துறை அறிவு வியக்க வைக்கிறது.கேள்வி - பதில்கள் ரசிக்க வைக்கின்றன.அரசியல் செய்திகளை சார்பில்லாமல் நடுநிலையோடு பிரசுரம் செய்வதில், தினமலருக்கு நிகராக வேறொரு நாளிதழைச் சொல்ல முடியவில்லை. சில நாளிதழ்களில் சில செய்திகளை மறைக்கின்றனர். அவர்களுக்கு என்று சில கட்டுப்பாடுகள் உள்ளன. ஆனால், துணிவோடு செய்திகளை வெளியிடுவது 'தினமலர்' மட்டுமே.நிதி நிர்வாகம், பட்ஜெட் போன்ற விஷயங்களை அத்துறை சார்ந்த வல்லுநர்களைக் கொண்டு பாமரருக்கும் புரியும் வகையில் வெளியிடுவது மிகச் சிறப்பு. திருப்பூரின் தொழில் வளர்ச்சி, ஏற்றுமதி சார்ந்த பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து செய்திகளை வெளியிட்டு, திருப்பூரின் வளர்ச்சிக்கு 'தினமலர்' முக்கிய பங்காற்றுகிறது என்றால், அது மிகையல்ல.தினமும் புத்தம்புது மலராய் பூத்து, மக்களின் அறிவுப்பசிக்கு விருந்தளித்து, 75ம் ஆண்டில் நுழையும் 'தினமலர்' மேலும் பல நுாற்றாண்டுகள் சிறப்பான சேவையாற்ற வாழ்த்துகிறோம்.இப்படிக்கு,கே.மாணிக்கம், நிர்வாக இயக்குநர், தி சென்னை சில்க்ஸ்.