உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / தினமலர் பவள விழா / நீதியாளர்கள் மத்தியில் தினமலருக்கு மதிப்பு உண்டு

நீதியாளர்கள் மத்தியில் தினமலருக்கு மதிப்பு உண்டு

'தினமலர்' நாளிதழ் உதித்த காலத்தில், நான் 10 வயது சிறுவன். அன்றிலிருந்து இன்று வரையிலும், நான் 'தினமலர்' வாசகன். ஆகவே அதை வாழ்த்தும் தகுதி எனக்கு உண்டு. 'சிங்கத்தை அதன் குகையிலேயே சந்தித்தவன்' என்று வீரப்பிரதாபங்கள் குறித்து பேசுவது வழக்கம். 'கன்னியாகுமரியை தாய்த் தமிழகத்துடன் இணைக்க வேண்டும்' என்ற போராட்டத்தின்போது, அதை திருவனந்தபுரத்தில் இருந்த ஏராளமானோர் எதிர்த்து வந்தனர். அத்தகைய எதிர்ப்பு களத்திலேயே, 'தினமலர்' நாளிதழை துவக்கி, குமரியின் உரிமையை மீட்டெடுக்கும் வரையிலும், திருவனந்தபுரத்திலேயே பத்திரிகை நடத்திய, டி.வி.ராமசுப்பையரை அத்தகைய பராக்கிரம பெருமான் என்று கூறுவது, முற்றிலும் பொருந்தும். நம் நாட்டில், 100 சதவீத கல்வி அறிவு பெற்ற மாவட்டம் என்ற மதிப்பும், மரியாதையும் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தான் முதன்முதலில் கிடைத்தது. இத்தகைய சாதனைக்கு சொந்தக்காரர்கள் சி.பி.ராமசாமி ஐயரும், டி.வி.ராமசுப்பையரும் என்பது பெருமைக்குரியது. என் இளமைக்காலம் திருநெல்வேலியில் கழிந்தது. அப்போது தினமலர் அலுவலகம் வழியே செல்லும்போதெல்லாம், அந்த அலுவலகத்தை ஆச்சரியமாக அண்ணாந்து பார்த்து செல்வது என் வழக்கம். இதழியில் அனுபவமே இல்லாத ராமசுப்பையர், பொதுவெளிக்கு வந்து, வெற்றிகரமான பத்திரிகையை நிலைநாட்டி இருக்கிறார் என்பது இமாலய வெற்றி ஆகும். செய்திகளுக்கு அப்பாற்பட்டு, கல்விக்கென தனிப்பட்ட கவனம் எடுத்து, தகவல்கள் கொடுத்து வரும் தினமலரின் தொண்டு, புகழுக்குரியது. 'ஜெயித்துக் காட்டுவோம், வழிகாட்டி, கவுன்சிலிங் விளக்கம், பாடங்களுக்கான கேள்வி - பதில், பட்டம், அரிச்சுவடி ஆரம்பம்' என்பதாக அடுக்கி தொடுக்கப் பட்டியல் மிகப் பெரியது. மலையாள மொழியை சீர்திருத்தம் செய்ய, அந்த மாநில பத்திரிகைகள் போட்டிபோட்டு, மக்களுக்கு வழிகாட்டி, நெறியூட்டின. தமிழகத்தை பொறுத்தவரை, தமிழ் மொழியின் எழுத்து சீர்மையை அமல்படுத்தி, பொதுமக்களின் பொதுமைப் பயன்பாடு அளவுக்கு வலிமைப்படுத்திய வகையில், தினமலருக்கு தமிழ்த்தாய் கடமைப்பட்டு இருக்கிறாள். காலையில் 'தினமலர்' நாளிதழை கையில் எடுத்தால், டீக்கடை பெஞ்ச் பகுதிக்கு தான் விழிகள் முதலில் பாயும். அந்த அளவுக்கு வாசகர்கள் மனங்களில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கிறது டீக்கடை பெஞ்ச்! 'தினமலர்' இதழ் விஸ்வரூபம் எடுத்த பின் தான், தொல்லியல் சார்ந்த உணர்வு பரவியது. குறிப்பாக, பண்டைய மன்னர்களின் நாணயங்கள் கண்டுபிடிக்கப்படும் போதெல்லாம், செய்திகள் விரிவாக தினமலரில் வெளிவரும். அவற்றை மிகுந்த ஆர்வத்துடன் படித்து பார்த்திருக்கிறேன். நீதித்துறையாளன் என்ற வகையில், தினமலரில் வெளிவந்த ராஜிவ் படுகொலை தொடர்பான, வர்மா கமிஷன் மற்றும் ஜெயின் கமிஷன் விசாரணை செய்திகள் பிரமிப்பூட்டின. நீதிமன்றத்தில் நடந்த வாக்குவாதங்கள், வரிக்கு வரி துல்லியமாக வந்த அந்த செய்திகள் விறுவிறுப்பான திரைப்படத்தை பார்த்த உணர்வைக் கொடுத்தன. 'நீதியின் தேரோட்டம்' என்ற பெயரில், நீதியரசர் மோகன் எழுதிய தொடர் கட்டுரைகளை தினமலரில் நான் வாசித்த காலம் நினைவில் இருக்கிறது. சட்டம் சார்ந்த கடின கருத்துக்கள் இந்த கட்டுரையில் எளிமையாக கொடுக்கப்பட்டிருந்ததை அப்போதே நான் படித்து சிலாகித்து இருக்கிறேன். ராமாயண, மகாபாரத இதிகாசங்களில் எனக்கு ஈடுபாடு அதிகம். தொலைக்காட்சியில் இந்த தொடர்கள் ஒளிபரப்பானபோது ஹிந்தி மொழி புரியாமல் தவித்து வந்தேன். அப்போதெல்லாம் தினமலரில் இதன் வரிக்கு வரி தமிழாக்கம் வெளியாகி வந்தது. தெய்வீக அறிவாற்றலுக்கு இந்த அணுகுமுறை அடித்தளமாக அமைந்தது. வாரமலரில் அந்துமணியின் படைப்புகளை நான் வாரந்தோறும் வாசித்து வருகிறேன். 'யார் அந்த அந்துமணி?' என்ற கேள்விக்குறியுடன் ஏங்கிக் கிடக்கிற லட்சக்கணக்கான வாசகர்களுள் நானும் ஒருவன். அசாதாரணமான நிகழ்ச்சிகள் நடக்கும்போதெல்லாம் தத்ரூபமான படங்களை பார்ப்பதற்கு, தினமலரை நாடுவது என்பது எங்களுக்கு வழக்கமாகி விட்டது. மக்கள் எதை விரும்புகின்றனரோ, அதைக் கொடுப்பது என்ற நிலையையும் தாண்டி, அறிவூட்டி, தெளிவூட்ட எவையெல்லாம் தேவையோ, அவற்றை தேடித் திரட்டிக்கொடுப்பது தினமலரின் தனி பாணி என்பது வளமை. தினமலரில் அவ்வப்போது வெளிவருகிற பல்வேறு கட்டுரைகளை நான் படித்திருக்கிறேன். பத்திரிகை வடிவில் பாட நுால்களோ என்று எண்ணும் அளவுக்கு விஷயப் பொதிவுகள் அவற்றில் வெளிப்படுகின்றன. எங்களை போன்ற நீதியாளர்களுக்கு மத்தியில் தினமலர் நாளிதழுக்கு என, நம்பகத்தன்மை மிக்க மதிப்பும், மரியாதையும் உண்டு. 'தினமலர்' நாளிதழ் மேலும் ஆல் போல் வளர்ந்து, அருகு போல் பெருக எல்லா வல்ல இறைவனை நான் வேண்டுகிறேன். முனைவர் டி.என்.வள்ளிநாயகம் நீதிபதி, லோக் அதாலத் மற்றும் சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்