டீக்கடை பெஞ்ச் பக்கத்தின் ரசிகன் நான்
நமது நாளிதழ் 'தினமலர்', என்று நினைத்துப் பார்த்தவுடன், என்னுடைய இளம் வயது நினைவுகள் இப்போதும் நெஞ்சில் நிழலாடுகின்றன. இன்றைய காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரி அன்றைக்கு இருபாலர் கல்லூரியாக இருந்தது. அப்போது நான் மாணவர் தலைவராக இருந்ததால் பெருந்தலைவர் காமராஜரோடு நெருக்கம் ஏற்பட்டது. அவரால் ஆரம்பிக்கப்பட்ட 'நவசக்தி' நாளிதழில், அவர் வாயிலாகவே பணியில் சேர்க்கப்பட்டேன். அங்கு, 1972 முதல் காமராஜரின் மறைவு வரை உதவி ஆசிரியராக பணியாற்றிய சமயத்தில், எங்கள் அலுவலகத்திற்கு 'தினமலர்' நாளிதழ் வரும். பலராலும் கவனிக்கப்படாத, மூலைமுடுக்குகளில் உள்ள செய்திகளையெல்லாம் கவனப்படுத்தி செய்தியாக்கும் முக்கியமான நாளிதழாக 'தினமலர்' இருக்கும். 'நவசக்தி' ஆசிரியர் தனுஷ்கோடி அவர்களோடு உதவி ஆசிரியர்களாக இருந்த நாங்கள் அனைவருமே, 'தினமலர்' நாளிதழின் செய்திகளை அடிப்படையாக வைத்தே நீண்ட நெடிய உரையாடலை நிகழ்த்தி, விவாதிப்போம். ஏறக்குறைய 50 ஆண்டுகளுக்கு முன்பு தவறாமல் தினமலரை வாசிக்கத் துவங்கிய அந்த வாசிப்புப் பயணம் இன்றைக்கும் தொடர்கிறது. ஒவ்வொரு நாளும் அதிகாலை 5:00 மணிக்கு தினமலரை வாசித்த பிறகே பிற நாளிதழ்களை வாசிப்பதை இப்போதும் வழக்கமாகக் கொண்டுள்ளேன். தினமலரின், 'டீக்கடை பெஞ்ச்', 'பேச்சு - பேட்டி - அறிக்கை', 'இது உங்கள் இடம்', 'டவுட் தனபாலு', 'அக்கம் பக்கம்', 'பக்க வாத்தியம்' என ஒரே பக்கத்தில் மொத்த சுவாரசியங்களையும் பொதித்து வைத்து வாசகர்களைக் கவரும் அந்தப் பக்கத்திற்கு இப்போதும் ரசிகன் நான். மாணவர்களின் முன்னேற்றத்தில் பெரும்பங்கு வகித்துக் கொண்டிருக்கிறது 'தினமலர்' மாணவர் பதிப்பு 'பட்டம்'. அதன் பணியும் குறிப்பிடத்தகுந்ததாகும். அதேபோல், வரலாற்றில் நீங்கா இடம்பிடித்த தினமலரின் முக்கியமான இருவரையும் இந்நேரத்தில் நினைத்துப் பார்க்கிறேன். கன்னியாகுமரி மாவட்டம், திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்தபோது, அதை தமிழகத்துடன் இணைக்கும் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த, 'தினமலர்' நாளிதழின் நிறுவனரான டி.வி.ராமசுப்பையர் அவர்களையும், நாணயவியல் சார்ந்து மிகப்பெரிய ஆய்வறிஞராக திகழ்ந்து, தமிழுக்கு தன் ஆய்வுப் பணிகளால் செழுமை சேர்த்த, முன்னாள் 'தினமலர்' ஆசிரியர் அமரர் இரா.கிருஷ்ணமூர்த்தி அவர்களையும் தமிழகம் என்றைக்கும் மறக்காது; நினைவில் வைத்துப் போற்றும். தற்போது, சென்னையில் பல்வேறு பள்ளி, கல்லூரிகளை நடத்தி நிர்வகித்து வரும் நான், என்னுடைய மைத்துனர் பேராசிரியர் இரகு அவர்களுடன் இணைந்து, பலமுறை இரா.கிருஷ்ணமூர்த்தி அவர்களை சந்தித்திருக்கிறேன். சந்திக்கும் ஒவ்வொரு தருணத்திலும் அவர் அளித்த மதிப்புமிகுந்த ஆலோசனைகள், எங்களுடைய வாழ்க்கை முன்னேற்றத்திற்குப் பயனுடையதாக அமைந்ததையும் நினைவுகூர்கிறேன். தமிழின் முக்கியமான நாளிதழான 'தினமலர்', தனது 75ஆம் ஆண்டு பவள விழாவைக் கொண்டாடும் இத்தருணத்தில் அதன் இதழியல் பணிகள் மென்மேலும் சிறந்து செழித்தோங்க வாழ்த்துகிறேன். முனைவர் கே.வாசுதேவன் நிறுவன தலைவர், பிரின்ஸ் கல்விக் குழுமம், சென்னை