எங்கள் வீட்டு பிள்ளை தினமலர்
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா என்பதில் நம் அனைவருக்கும் ஒரு பெருமை உண்டு. ஒரு மக்களாட்சி மக்களுக்காக நடக்கிறது என்பதை பத்திரிகை வாயிலாகவே அறிந்து கொள்ளலாம். அந்த அளவுக்கு மக்களின் உரிமை குரலாக பத்திரிகைகள் விளங்க வேண்டும். 'அந்த கடமை, என் கடமை' என நினைத்துச் செய்வதில் முன்னிலையில் இருப்பது 'தினமலர்' என்றால் அது மிகையல்ல. அதனால் தான், எல்லா தரப்பினரும், 'எங்கள் வீட்டுப்பிள்ளை' என கொண்டாடும் அளவுக்கு, ஒவ்வொரு குடும்பத்திலும் ஓர் அங்கமாக தினமலர் உள்ளது. மறைந்தும் மறையாமல், மக்களின் மனங்களில் வாழும், அ.தி.மு.க., நிறுவனர் எம்.ஜி.ஆரு.,க்கு மிகவும் பிடித்தமான நாளிதழ் தினமலர். தினமலர் ஈரோடு பதிப்பை எம்.ஜி.ஆர்., தான் துவக்கி வைத்தார். அதிலிருந்து அவருக்கும் தினமலருக்கும் இருந்த உறவை தெரிந்து கொள்ளலாம். அதே நல்லுறவு, எம்.ஜி.ஆரின் கொள்கை வாரிசுகளான மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுடன் தொடர்ந்தது. முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் தொடர்கிறது. என்னுடைய 50 ஆண்டு கால அரசியல் பயணத்தில், தினமலரை ஒரு நாளும் படிக்காமல் இருந்ததில்லை. நான் எம்.பி.,யாக இருந்த போதும் சரி, எம்.எல்.ஏ.,வாக இருக்கிற நிலையிலும் சரி, தினமலரில் வெளியான செய்திகளை சுட்டிக்காட்டி, ராஜ்யசபா மற்றும் சட்டசபையில் பேசி, முக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டு இருக்கிறேன். நான் மதுரை மாநகராட்சி மேயராக இருந்த காலத்தில், நகரில் எனக்கு தெரியாத பிரச்னைகளை தினமலர் செய்திகள் வாயிலாகவே தெரிந்து கொண்டேன். அவற்றை அதிகாரிகளிடம் சுட்டிக்காட்டி, பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு இருக்கிறேன். மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் போல், குமரிக்கோட்டத்தை மீட்ட தினமலர் நிறுவனர் டி.வி.ஆர்., எந்த நோக்கத்திற்காக தினமலரை துவக்கினாரோ, அந்த நோக்கத்திலிருந்து இம்மி அளவும் விலகாமல், அவரது வழித்தோன்றல்கள் சிறப்புடன் நடத்தி வருவது பாராட்டுக்குரிய விஷயம். பத்திரிக்கை துறையையும் தாண்டி, சமூக சேவைகளிலும் தினமலர் நிர்வாகிகள் ஈடுபட்டு வருவது சிறப்புக்குரியதாகும். நாட்டின் வருங்கால தலைவர்களான மாணவர்களுக்காக பிரத்யோகமாக பட்டம் என்ற அறிவுக்களஞ்சியத்தையும், சங்கே முழங்கு என வெளியிட்டு வருவது, பாராட்டுக்குரிய ஒன்றாகும். பட்டம் இதழில் வருவதை, திங்களன்று தினமலரில் ஒரு பக்கமாக வெளியிட்டு வருவதையும் நான் படிக்க தவறுவதில்லை. மாணவர்கள் உட்பட அனைவரும் படித்து பாதுகாக்க வேண்டிய ஒன்று அது. மக்கள் எண்ணங்களை மத்திய-மாநில அரசுகளுக்கு சுட்டிக்காட்டி புதிய பூமி உருவாக்குவதில் முன்னணியில் உள்ள தினமலர், மதுரை வீரனாக, ஆயிரத்தில் ஒருவனாக திகழ்கிறது. பவள விழா கொண்டாடும் தினமலர் இன்று போல் என்றும் வாழ்க. பல்லாண்டு வாழ்க என வாழ்த்தி மகிழும், ராஜன் செல்லப்பா, எம். எல். ஏ., அ.தி.மு.க., அமைப்புச் செயலர்