உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / தினமலர் பவள விழா / மக்களுக்கு தோளோடு தோளாக துணை நிற்பது தினமலர்

மக்களுக்கு தோளோடு தோளாக துணை நிற்பது தினமலர்

அ.தி.மு.க., என்ற இயக்கம் துவங்கப்பட்டு, தவழும் குழந்தையாக இருந்த போதே, 'தினமலர்' நாளிதழ் தன் முழு ஆதரவை வழங்கியது. அப்போது, அ.தி.மு.க., இயக்கத்தின் பெயரை கூட வெளியிட சில பத்திரிகைகள் தயங்கின. நடிகர் கட்சி என்றும், ஒட்டு காங்கிரஸ் என்றும் செய்தி வெளியிட்டன. எம்.ஜி.ஆரின் செய்திகளை பிற பத்திரிகைகள் வெளியிடுவதை தவிர்த்து வந்த அக்காலத்தில், அ.தி.மு.க., என முதல் முறையாக செய்தி வெளியிட்டு பெருமைப்படுத்தியது 'தினமலர்' தான்.கடந்த 1972ல் அ.தி.மு.க.,வை எம்.ஜி.ஆர்., துவங்கிய காலம் முதல், 1977ல் ஆட்சியை பிடிக்கும் வரை பல சோதனைகளை சந்திக்க வேண்டியிருந்தது. அப்போதெல்லாம் எம்.ஜி.ஆருக்கு பக்கபலமாக இருந்தது 'தினமலர்' நாளிதழ். கடந்த 1973ம் ஆண்டு நடந்த திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத்தேர்தலின் போது, அ.தி.மு.க., வேட்பாளர் மாயத்தேவரின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்து பணியாற்றியது 'தினமலர்' என்பதை நினைவு கூறுகிறேன்.அதேபோல, கோவை மேற்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல், புதுச்சேரி யூனியன் பிரதேச பொதுத்தேர்தல், கோவை நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தல் என, அனைத்து சோதனைகளையும் அ.தி.மு.க., வென்றெடுக்க, எம்.ஜி.ஆருக்கு 'தினமலர்' பெரிதும் துணை நின்றது. மேலும், எம்.ஜி.ஆர்., ஆட்சி செய்த 11 ஆண்டு காலத்தின் அளப்பரிய சாதனைகளை பட்டிதொட்டியெல்லாம் எடுத்து சென்றது 'தினமலர்' நாளிதழ் தான்.எம்.ஜி.ஆர்., அவர்களால் 'தினமலர்' ஈரோடு பதிப்பு துவக்கப்பட்டதை நான் நினைவுகூர விரும்புகிறேன். தினமலர் நிறுவனர் ஐயா டி.வி.ராமசுப்பையர் மீது, எம்.ஜி.ஆர்., மிகப்பெரிய மரியாதை கொண்டிருந்தார். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 24ம் தேதியன்று புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., அவர்களின் நினைவுநாளையொட்டி கட்டுரைகளை தவறாமல் வெளியிட்டு வருவதை பாராட்டுகிறேன். எம்.ஜி.ஆர்., மறைவுக்கு பின், ஜெயலலிதா அவர்களின் அரசியல் பயணத்திலும் 'தினமலர்' முக்கிய பங்காற்றியது. 1990ம் ஆண்டு சென்னையில் நடந்த புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., அவர்களின் சிலை திறப்பு விழா நிகழ்ச்சி, 2010ம் ஆண்டு, 'கோவை குலுங்கியது' என, புரட்சித்தலைவி அம்மாவின் நிகழ்ச்சியை, தொண்டர்கள உற்சாகப்படும் வகையில் படம் பிடித்து காட்டியது 'தினமலர்' நாளிதழ்.கடந்த 2001 முதல் தமிழ்நாடு அரசின் சட்டசபை உறுப்பினராகவும், அமைச்சராகவும், துணை சபாநாயகராகவும் தொடர்ந்து 25 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன். என்னை போன்ற எளிய விவசாய குடும்பத்தில் இருந்து வந்து, அரசியலில் பணியாற்றிக்கொண்டு இருப்பவர்களை ஊக்கப்படுத்தி, உற்சாகப்படுத்தும் விதமாக, எங்களது குறை, நிறைகளை சுட்டிக்காட்டி எங்கள் வளர்ச்சியில் 'தினமலர்' பங்காற்றி உள்ளது.ஓர் எளிய விவசாய குடும்பத்தில் பிறந்த அ.தி.மு.க., பொதுச்செயலாளர் 'மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்' சுற்றுப்பயணத்தை மக்களிடம் கொண்டு செல்வதில் 'தினமலர்' உதவி வருவதை நான் நன்றியுடன் நினைவுகூர விரும்புகிறேன்.மக்களுக்காக உழைக்க வேண்டும் என துவங்கப்பட்டது அ.தி.மு.க., இயக்கம். மக்களுக்காக சேவை செய்ய வேண்டும் என்பதற்காக துவங்கப்பட்டது 'தினமலர்' நாளிதழ். இந்த உன்னத நோக்கத்தில் சிறப்பாக செயலாற்றி வருகிறது. சமுதாயத்தின் அனைத்து பிரிவு மக்களையும் சென்றடையும் வகையில், நாள்தோறும் செய்திகள் வெளியிட்டு வருவது சாதாரணமல்ல. தமிழக மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும்; உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்பதில் மாறாத கொள்கையுடன் 'தினமலர்' நாளிதழ் உள்ளது. அரசுக்கு ஊதுகோலாக இல்லாமல், சாதாரண மக்கள், தொழில் முனைவோர், விவசாயிகள் என, எந்த தரப்பின் பிரச்னையாக இருந்தாலும், அதை தீர்க்கும் வரை 'தினமலர்' ஓயாது. மக்களுக்கு தோளோடு தோளாக துணை நிற்கும் 'தினமலர்' நாளிதழுக்கு நிகர் 'தினமலர்' நாளிதழ் தான்.அ.தி.மு.க.,வும், 'தினமலர்' நாளிதழும் பிரிக்க முடியாத பந்தம் கொண்டவை. டி.வி.ராமசுப்பையர் - எம்.ஜி.ஆர்., துவங்கி வைத்த பந்தம் என்றும் தொடர வேண்டும். தமிழக மக்களுக்கு இணைந்து சேவை செய்ய வேண்டும்.இப்படிக்கு,'பொள்ளாச்சி' வ.ஜெயராமன்அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,முன்னாள் தமிழக அமைச்சர் மற்றும் துணை சபாநாயகர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !