மேலும் செய்திகள்
தினமலர் வாசகன் என்பதில் பெருமை கொள்கிறேன்
08-Oct-2025
ஒரு தினசரி இதழ் 75வது ஆண்டை தொடுவதென்பதே பெரிய சாதனை!அச்சிதழ்கள் கோலோச்சிய காலமும் உண்டு. மற்ற ஊடகங்களின் வளர்ச்சியால் பலவிதமான சவால்களையும், பாதிப்புகளையும் சந்திக்க வேண்டிய காலம் இது.இன்றும், தமிழ் தினசரிகளில் பிரபலத்தன்மையை இழக்காத வெகுசிலவற்றில் ஒன்று, ‛தினமலர்' நாளிதழ்.தினமலரின் ஞாயிறு இலவச இணைப்பாக வரும் வாரமலரில் கதைகள், கட்டுரைகள், ஓவியங்கள் என்று பல்வகை பகுதிகளை சுவாரசியமாக வழங்கி, இலவச இதழையும் ஜொலிக்க வைத்த பெருமை தினமலருக்கானது. பிறகே மற்ற நாளிதழ்களும் இலவச இதழ்கள் கொண்டுவந்தன.வாரமலரில் நிறைய சிறுகதைகள் எழுதியிருக்கிறேன். எழுத்தாளர்களுக்கு நிறைவான சன்மானம் வழங்குவதிலும் தினமலர் உயர்ந்து நிற்கும். தினமலரின் அரசியல் சார்ந்த கருத்துக்களில் மாற்றுக்கருத்து கொண்டவர்களும், தினமலர் என்ன சொல்கிறது என்று கவனிக்க தவறுவதில்லை. தினமலர் முதல் பக்கத்தில் கொடுக்கும் ஈர்க்கும் தன்மையுடன் கூடிய தலைப்புகளும் சுவாரசியமானவை.அரசியல் கட்சிகள் ஒரு குறிப்பிட்ட சதவீதம் ஓட்டு வங்கி வைத்திருப்பது போல, மிகப்பெரிய வாசகர் வட்டத்தைத் தொடர்ந்து தன்னிடம் அபிமானம் கொண்ட வாசக வங்கியாகவே வைத்திருப்பது அதன் பலம்!அந்த பலம் மேலும் கூடவும், புதிய வேகத்துடன் தொடர்ந்து பயணிக்கவும், இந்த 75வது ஆண்டில் மனதார வாழ்த்துகிறேன்.இப்படிக்குபட்டுக்கோட்டை பிரபாகர்எழுத்தாளர்
08-Oct-2025