மேலும் செய்திகள்
தினமலர் செய்தி; ஒளிர்ந்தது விளக்கு
03-Oct-2025
திருத்தணி மருத்துவமனை கழிப்பறைகள் பளிச்
26-Sep-2025
படப்பை மேம்பாலத்தில் தார் சாலை அமைப்பு
26-Sep-2025
கோவை,:நமது நாளிதழில் வெளியிட்ட செய்தியை தொடர்ந்து, உக்கடம் பெரிய குளம் மற்றும் குனியமுத்துார் அணைக்கட்டு, செங்குளம் மற்றும் பேரூர் குளங்களுக்கு நீர் செல்லும் வழித்தடங்களை, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் நேற்று ஆய்வு செய்தார். வழங்கு வாய்க்கால்களில் தண்ணீர் செல்வதை 'டிரோன்' மூலம் கண்காணிக்க, அவர் உத்தரவிட்டார்.கோவை நகர் மற்றும் சுற்றுப்பகுதிகளில், சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. சித்திரைச்சாவடி அணைக்கட்டில் இருந்து நொய்யல் ஆற்றில் வினாடிக்கு, 1,300 கன அடி தண்ணீர் செல்கிறது. வாய்க்காலில், வினாடிக்கு, 110 கன அடி தண்ணீர் செல்கிறது; குனியமுத்துார் செங்குளத்துக்கு, 100 கன அடி, குறிச்சி குளத்துக்கு, 70 கன அடி தண்ணீர் செல்கிறது.சேத்துமா வாய்க்காலில் ஆகாயத் தாமரை படர்ந்திருப்பதால், உக்கடம் பெரிய குளத்துக்கு மழைநீர் செல்லவில்லை. செல்வ சிந்தாமணியில் இருந்து அனுப்பப்படும் கழிவு நீரே சேகரமாகிறது. இதுதொடர்பாக, நேற்றைய நமது நாளிதழில், படங்களுடன் செய்தி வெளியிடப்பட்டது. மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், பொதுப்பணித்துறை உதவி நிர்வாக பொறியாளர் அம்சராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று நேரில் கள ஆய்வு செய்தனர்.உக்கடம் குளத்துக்கு தண்ணீர் அனுப்பப்படும் ஆண்டிபாளையம் பிரிவு மதகு கூடுதலாக திறக்கப்பட்டது. சேத்துமா வாய்க்காலில் படர்ந்திருந்த ஆகாயத்தாமரை அகற்ற, ஒரு பொக்லைன் இயந்திரம் இயக்கப்பட்டது. குனியமுத்துார் அணைக்கட்டில் ஒரு மரம் விழுந்திருந்ததால், தண்ணீர் செல்ல தடை ஏற்பட்டு இருந்தது. அடைப்புகளை நீக்கி, மூன்று மதகுகளையும் திறந்து, தண்ணீர் அனுப்ப கமிஷனர் அறிவுறுத்தினார். உக்கடம் பெரிய குளம், குறிச்சி குளம், குனியமுத்துார் செங்குளம் மற்றும் பேரூர் குளங்களுக்கு தண்ணீர் செல்வதை, 'டிரான்' மூலம் கண்காணிக்க, மாநகராட்சி பொறியியல் பிரிவினருக்கு, அவர் உத்தரவிட்டார்.மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் கூறுகையில், ''குளங்களுக்கு நீர் வழங்கு வாய்க்கால்கள் மற்றும் குளங்களின் முகப்பு பகுதிகளை பார்வையிட்டோம். உக்கடம் பெரிய குளத்துக்கு இன்னும் முக்கால் அடிக்கு தண்ணீர் வந்தால் நிரம்பி விடும். சேத்துமா வாய்க்காலில் கூடுதலாக தண்ணீர் வர, ஆண்டிபாளையம் பிரிவு மதகில் இரண்டு இன்ச் கூடுதலாக திறக்கப்பட்டது. செங்குளத்துக்கு ஒரு மதகு மட்டும் திறக்கப்பட்டு இருந்தது; அடைப்புகளை நீக்கி மற்ற இரண்டு மதகுகளும் திறக்கப்பட்டன. கிருஷ்ணாம்பதி குளத்துக்கு தண்ணீர் வருவதற்கு, நாகராஜபுரத்தில் பாலம் கட்டும் பணி நடப்பதால், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.
சித்திரைச்சாவடி அணைக்கட்டில் இருந்து வழங்கு வாய்க்காலில் திறந்து விடப்படும் மழை நீர், மாநகராட்சி பகுதியில் உள்ள கிருஷ்ணாம்பதி குளத்துக்கு வந்தடைய வேண்டும். நம்பியழகன்பாளையத்தில் நாகராஜபுரம் என்ற இடத்தில் வாய்க்கால் குறுக்கே பாலம் அகலப்படுத்தப்படுகிறது. இவ்வேலை முடியாததால், வாய்க்கால் குறுக்கே மண்ணை கொட்டி, தண்ணீர் செல்ல தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, கிருஷ்ணாம்பதி, செல்வம்பதி, முத்தண்ணன் மற்றும் செல்வ சிந்தாமணி குளங்களுக்கு நொய்யல் ஆற்றில் இருந்து தண்ணீர் வரவில்லை.பாலம் கட்டும் பணியை விரைவுபடுத்தவோ அல்லது, தற்காலிகமாக நிறுத்தி வைத்து விட்டு, மழை நீரை குளத்துக்கோ அனுப்பவோ, கலெக்டர் கிராந்திகுமார் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக, கலெக்டரின் கவனத்துக்கு மாநகராட்சி அதிகாரிகள் கொண்டு சென்றுள்ளனர்.
03-Oct-2025
26-Sep-2025
26-Sep-2025