‛தினமலர் செய்தி எதிரொலி நீர்வரத்து கால்வாய் சீரமைப்பு
திருத்தணி:திருத்தணி ஒன்றியம் வி.கே.ஆர்.புரம் ஊராட்சி, பொந்தாலகண்டிகை கிராமத்தில், குடிநீர் வசதிக்காக மாநில நெடுஞ்சாலையோரம் பல லட்சம் ரூபாய் மதிப்பில் குடிநீர் மேல்நிலைத் தொட்டி கட்டி முடித்து, பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் பயன்பாட்டிற்கு கொண்டு வரவில்லை. இதனால் குடிநீர் தொட்டி பராமரிப்பின்றியும், தொட்டியை சுற்றியும் செடி, கொடிகள் வளர்ந்து இருந்தன. அதே போல், குடிநீர் தொட்டிக்கு அருகே உள்ள ஊராட்சி குளத்திற்கு நீர்வரத்து வரும் கால்வாய் பராமரிப்பின்றி இல்லாமல் இருந்ததால் செடிகள் வளர்ந்து இருந்தன. இதனால் மழைநீர் குளத்திற்கு வருவதற்கு சிக்கல் ஏற்பட்டது. இது குறித்து நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து ஊராட்சி நிர்வாகம் நேற்று முன்தினம், குடிநீர் தொட்டி மற்றும் நீர்வரத்து கால்வாய் ஆகிய இடங்களில் வளர்ந்துள்ள செடி, கொடிகளை 100 நாள் தொழிலாளர்கள் மூலம் அகற்றி சீரமைத்தனர்.