‛தினமலர் செய்தி எதிரொலி நெடுஞ்சாலை பள்ளங்கள் சீரமைப்பு
திருத்தணி:திருத்தணி பைபாஸ் ரவுண்டானா பகுதியில் இருந்து சித்துார் சாலை செல்லும் பகுதியில் ரயில்வே பாலத்தின் கீழ் செல்லும் தரைப்பாலத்தில், 5க்கும் மேற்பட்ட இடத்தில் பள்ளங்கள் ஏற்பட்டிருந்தன. இவ்வழியாக செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்பவர்கள் பள்ளத்தில் தவறி விழுந்து காயத்துடன் சென்று வந்தனர். இதுதவிர பிற வாகன ஓட்டிகளும் மெகா பள்ளத்தால் அப்பகுதியில் அச்சதுடன் கடந்து சென்று வந்தனர். இந்த பள்ளங்களை சீரமைக்க வேண்டும் என பலமுறை வாகன ஓட்டிகள் திருத்தணி நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.இது குறித்து நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதை தொடர்ந்து நெடுஞ்சாலை துறை ஊழியர்கள் ரயில்வே பாலத்தின் கீழ் தரைப்பாலத்தில் சேதமடைந்த பள்ளங்களை சீரமைக்கும் பணியில் நேற்று ஈடுபட்டனர். இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.