உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / செய்தி எதிரொலி / தோண்டப்பட்ட சாலையில் டூவீலருக்கு மட்டும் வழித்தடம் தினமலர் செய்தி எதிரொலி

தோண்டப்பட்ட சாலையில் டூவீலருக்கு மட்டும் வழித்தடம் தினமலர் செய்தி எதிரொலி

-சென்னை, போக்குவரத்து நிறைந்த கோவிலம்பாக்கம்- - மடிப்பாக்கம் பிரதான வழித்தடமான அம்பேத்கர் சாலையின் குறுக்கே, மழைநீர் வடிகால் பணிக்காக தோண்டிய பள்ளத்தில், இருசக்கர வாகனங்கள் மட்டும் செல்லும் வகையில் வழித்தடம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.கோவிலம்பாக்கம் - -மடிப்பாக்கம் பிரதான வழித்தடமாக அம்பேத்கர் சாலை அமைந்துள்ளது. தினசரி ஆயிரக்ககணக்கான இரு, நான்கு சக்கர வாகனங்கள் கடந்து செல்கின்றன. இதுபோன்ற போக்குவரத்து நிறைந்த சாலைகளில் வடிகால் பணி மேற்கொள்ளும்போது, ஒரு பாதியை தோண்டி பணியை முடித்து, மீண்டும் மற்றொரு பாதியில் பணியை மேற்கொள்வது வழக்கம். இதனால், வாகன போக்குவரத்துக்கு ஓரளவு வழி கிடைக்கும். ஆனால், ராஜராஜேஸ்வரிநகர் அருகே போக்குவரத்திற்கு வழியின்றி, சாலை முற்றிலும் துண்டிக்கப்பட்ட நிலையில் பள்ளம் தோண்டப்பட்டது. இரு சக்கரவாகனங்கள் கூட செல்ல வழி இல்லாத நிலை. பொதுவாக பள்ளம் தோண்டிய சாலையின் இடது, வலது பகுதியில் உள்ள நகர், தெருக்களின் வழியாக சுற்றி வந்தால் வழி இருக்கும். வாகன ஓட்டிகள் சுற்றி சென்றுவிடுவர். ஆனால், அம்பேத்கர் சாலையில் அப்படிப்பட்ட மாற்று வழித்தடமே இல்லை.இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையின் வலது, இடது புறம் திரும்பி பல கி.மீ., துாரம் தெரு, தெருவாக சென்று வழி தெரியாமல் தவித்தனர். சில தன்னார்வலர்கள் பள்ளத்தில் இருசக்கர வாகனம் செல்ல வழித்தடம் ஏற்படுத்த முயன்று தோற்றனர்.நான்கு சக்கர வாகனங்கள் அரை கி.மீ., துாரம் உள்ள மடிப்பாக்கம் பேருந்து நிலையம் வருவதற்கு, 7 கி.மீ., துாரம் சுற்றிக் கொண்டு ரேடியல்சாலை, தாம்பரம்-வேளச்சேரி சாலை வழியாக வர வேண்டி இருந்தது.சாலையை தோண்டிய ஓப்பந்ததாார்கள் நேற்று மதியம் வரை பணியை துவக்கவே இல்லை. இதனால், அதிருப்தி அடைந்த மக்கள், தொகுதி எம்.எல்.ஏ., அரவிந்தரமேஷ், வார்டு கவுன்சிலர் சமீனா மற்றும் மாநகராட்சி செயற்பொறியாளரிடம் முறையிட்டனர்.இது குறித்து நமது நாளிதழும் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, பிரதான சாலையில் தோண்டப்பட்ட பகுதிகளில் இருசக்கர வாகனம் மட்டும் செல்லும் வகையில் வழித்தடம் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ