கள்ளச்சந்தை மது விற்பனை பூந்தமல்லியில் நிறுத்தம்
பூந்தமல்லி:பூந்தமல்லி நகரத்தை சுற்றி, பூந்தமல்லி மற்றும் நசரத்பேட்டை காவல் எல்லையில், 15 டாஸ்மாக் கடைகள் இயங்குகின்றன.இங்கு, அரசு அனுமதியுடன் மது கூடங்களும் அமைந்துள்ளன. டாஸ்மாக் கடை மூடி, மறுநாள் கடை திறக்கும் வரை, மது கூடங்களில் கள்ளச்சந்தையில் கூடுதல் விலைக்கு விற்கப்பட்டது.மதுப்பிரியர்களை கவர கிளாஸ், குடிநீர், சிப்ஸ், வெள்ளரி, தர்பூசணி, ஆரஞ்சு, அன்னாசி, கொய்யா உள்ளிட்ட பழத்துண்டுகள், கோழி கறி, வாத்து கறி இலவசமாக வழங்கப்பட்டது.போலீஸ், அதிகாரிகளின் தொந்தரவும் இல்லை. கூடுதல் விலைக்கு மது வாங்கினாலும், இலவசமாக சைடு டிஷ் கிடைப்பதால், இங்கு மதுப்பிரியர்களின் வருகை அதிகரித்து, விற்பனை களைகட்டியது.இதுகுறித்து, நம் நாளிதழில், வரைபடத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து, பூந்தமல்லி, நசரத்பேட்டை காவல் நிலைய எல்லையில் உள்ள மது கூடங்களில், கள்ள சந்தையில் மது விற்பனை செய்வதை, போலீசார் தடை செய்தனர்.