ஆதார் இல்லாத மாணவர்களை பள்ளியில் சேர்த்த கலெக்டர்
பெரம்பலுார்:ஆதார் கார்டு இல்லாததால், பள்ளி செல்ல முடியாமல் வீட்டில் முடங்கிய இரு மாணவர்கள், கலெக்டரின் நடவடிக்கையால் மீண்டும் அரசு பள்ளியில் சேர்க்கப்பட்டனர். பெரம்பலுார் மாவட்டம்,பெண்ணைக்கோணம் கிராமத்தை சேர்ந்த சாமிதுரை - -சுகன்யா தம்பதியின் மகன்கள் செல்வகுமார், 12, மணிகண்டன், 13; இருவரும், லப்பைகுடிகாடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 7, 8ம் வகுப்பு படிக்கின்றனர். பாட்டி லட்சுமி பராமரிப்பில் உள்ள இவர்களுக்கு, இதுவரை ஆதார் கார்டு வாங்கவில்லை. ஆதார் கார்டு மற்றும் பிறப்பு சான்றிதழ் இல்லாததால், பள்ளியில் படிப்பை தொடர முடியாமல் வீட்டிலேயே முடங்கினர். இது குறித்து, நம் நாளிதழில், வெளியான செய்தியை பார்த்த பெரம்பலுார் கலெக்டர் அருண்ராஜ், சி.இ.ஓ., மற்றும் தாசில்தார் ஆகியோரை நேற்று மாணவர்களின் வீட்டிற்கு அனுப்பி, அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க உத்தரவிட்டார். இரண்டு மாணவர்களும் பள்ளியில் சேர்க்கப்பட்டனர். நேற்று மாலை, பெரம்பலுார் கலெக்டர் அலுவலகத்திற்கு, மாணவர்களை நேரில் அழைத்து, சேர்க்கைக்கான உத்தரவு நகலை, கலெக்டர் அருண்ராஜ் வழங்கினார்.