ஆய்வகங்கள் அமைக்கும் பணியை விரைவுபடுத்த கலெக்டர் அறிவுரை
கோவை; கோவை அரசு பள்ளிகளை மேம்படுத்தும் திட்டத்தில், 'ஸ்மார்ட் போர்டு'கள் மற்றும் 'ஹைடெக்' ஆய்வகங்கள் அமைக்கும் பணி இன்னும் முடிக்கப்படாததால், மாணவர்களின் கணினி சார்ந்த கற்றல் பாதிக்கப்படுகிறது. பெரியநாயக்கன்பாளையம், சூலுார், பேரூர், காரமடை உள்ளிட்ட 13 ஒன்றியங்களில் உள்ள 139 துவக்கப்பள்ளிகளுக்கு, 'ஸ்மார்ட் போர்டு' இணைப்புகள் வழங்கப்படவில்லை. அதேபோல், 291 பள்ளிகளில் 'ஹைடெக்' ஆய்வகங்கள் அமைக்கும் பணி துவங்கப்படவில்லை. 155 ஆய்வகங்கள் மட்டுமே மாணவர்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. மீதமுள்ள ஆய்வகங்களில் பைபர் கேபிள், யூபிஎஸ் போன்ற அடிப்படை வசதிகள் இன்னும் நிறைவடையாததால், மாணவர்களுக்கு தொழில்நுட்ப அடிப்படையிலான கற்றல் வாய்ப்பு தடைபடுகிறது. இது குறித்து, நமது நாளிதழில் கடந்த 28ம் தேதி செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து, ஆய்வகப் பணிகளை மேற்கொள்ளும் 'கெல்ட்ரான்' நிறுவன அதிகாரி மற்றும் கல்வி அதிகாரிகளுடன் கலெக்டர் பவன்குமார் ஆலோசனை நடத்தினார். நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்ட அவர், 'பள்ளிகளில் எந்நேரம் வேண்டுமானாலும் ஆய்வு நடத்துவேன்' என எச்சரித்திருக்கிறார்.