செய்தி எதிரொலி ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பு வேலி அமைப்பு
உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம் மானாம்பதி கிராமத்தில், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை பெருநகர், மேனலூர், அரசாணிமங்கலம், காரணை உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்தோர் பயன்படுத்தி வருகின்றனர்.இங்கு, பொது மருத்துவம், மகப்பேறு, கர்ப்பிணியர் பரிசோதனை, சர்க்கரை அளவு மற்றும் ரத்த அழுத்த பரிசோதனை உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படுகின்றன. கடந்த 30 ஆண்டுகளாக இயங்கி வரும் சுகாதார நிலையத்தை சுற்றி, பாதியளவு மட்டுமே தடுப்பு வேலி அமைக்கப்பட்டு இருந்தது.மேலும், வளாகத்தில் செடி, கொடிகள் அதிகளவில் வளர்ந்துள்ளன. இதுகுறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் இருந்த செடி, கொடிகள் அகற்றப்பட்டு, தடுப்பு வேலி அமைக்கப்பட்டு உள்ளது.