உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / செய்தி எதிரொலி / சேதமடைந்த மத்துார் ஏரி கலங்கல் சீரமைப்பு

சேதமடைந்த மத்துார் ஏரி கலங்கல் சீரமைப்பு

திருத்தணி: நம் நாளிதழில் வெளியான செய்தி எதிரொலியால் சேதமடைந்த மத்துார் ஏரி கலங்கலை நீர்வளத்துறையினர் சீரமைத்தனர். வடகிழக்கு பருவ மழை மற்றும் 'மோந்தா' புயலால் பெய்த பலத்த மழையால் திருத்தணி ஒன்றியம், மத்துார் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து தற்போது, ஏரியில் தண்ணீர் நிரம்பியுள்ளன. இந்த ஏரியை நம்பி, 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். இந்நிலையில், மத்துார் ஏரியின் கலங்கல் இரு ஆண்டுகளுக்கு முன் சேதமடைந்தது. இதனால் மழை பெய்யும் போதும், ஏரியில் இருந்து தண்ணீர் கலங்கல் வழியாக வீணாக தண்ணீர் வெளியேறி வந்தது. அந்த வகையில் தற்போதும் ஏரியில் இருந்து கலங்கல் வழியாக தண்ணீர் வெளியே சென்றது. இது குறித்து நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து திருத்தணி நீர்வளத்துறை அதிகாரிகள் பொக்லைன் இயந்திரம் மற்றும் மணல் மூட்டைகளுடன் மத்துார் ஏரி கலங்கல் பகுதிக்கு சென்று, வீணாக வெளியேறும் தண்ணீரை தடுத்து நிறுத்துவதற்கு மணல் மூட்டைகள் அடுக்கியும், அதன் மீது மண்கொட்டியும் சீரமைக்கப்பட்டது. இது குறித்து திருத்தணி நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'சேதமடைந்த மத்துார் ஏரியின் கலங்கல் பகுதியை புதியதாக கட்டுவதற்கு, 22 லட்சம் ரூபாய் திட்ட மதிப்பீடு தயார் செய்துள்ளோம். நிதியுதவி கிடைத்ததும் கலங்கல் சீரமைக்கப்படும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை