தினமலர் செய்தி எதிரொலி: மின்மாற்றி அமைக்கும் பணி துவக்கம்
முதுகுளத்துார்: தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக முதுகுளத்துார் அருகே சடையனேரியில் தனியாக மின்மாற்றி அமைக்கும் பணி நடந்தது. சடையனேரியில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கு கால்நடை வளர்ப்பு, விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. கிராமத்திற்கு கடலாடி துணை மின் நிலையத்திலிருந்து மின்சப்ளை செய்யப்படுகிறது. இங்கு கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு வைக்கப்பட்ட மின் கம்பத்தின் வழியாக உயரழுத்த மின்கம்பி செல்கிறது. விவசாய பயன்பாட்டிற்கும், வீட்டு பயன்பாட்டிற்கும் ஒரே மின்மாற்றியிலிருந்து மின்சாரம் செல்வதால் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது.போதுமான மின்சார வசதியில்லாமல் மக்கள் அடிக்கடி சிரமப்படுகின்றனர். இது குறித்து தனித்தனியாக மின்மாற்றி அமைக்க வேண்டும் என்று பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக சடையனேரி கிராமத்தில் தனியாக மின்மாற்றி அமைக்கும் பணியில் மின்வாரியத்துறை பணியாளர்கள் ஈடுபட்டனர். செய்தி வெளியிட்ட தினமலர் நாளிதழுக்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர். --