ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்தது வீல் சேர்; தினமலர் செய்தி எதிரொலி
பொள்ளாச்சி; 'தினமலர்' செய்தி எதிரொலியாக, பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷனில், 'வீல் சேர்' மற்றும் 'ரேம்ப்' வந்துள்ளது. கூடுதல் 'வீல் சேர்' கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.பொள்ளாச்சி - கோவை வழித்தடத்தில், பொள்ளாச்சி - கோவைக்கு காலை மற்றும் மாலை நேரத்திலும், மதுரை - கோவை ரயில், திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.பாலக்காடு - திண்டுக்கல் ரயில் பாதையில் திருச்செந்துார் ரயில், திருவனந்தபுரம் -மதுரை அமிர்தா எக்ஸ்பிரஸ், பாலக்காடு - சென்னை எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படுகின்றன.இந்நிலையில், பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷனில் போதிய வசதிகளை மேம்படுத்த பயணியர் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷனில் அறுவை சிகிச்சை செய்து வருவோர், மாற்றுத்திறனாளிகளை அழைத்துச் செல்ல 'வீல் சேர்' சரியான இடத்தில் வைக்க வேண்டும். அவர்களது சிரமம் போக்கும் வகையில், மாற்றுத்திறனாளிகளுக்கான 'வீல் சேர்' எங்குள்ளது என்ற விபரம் தெரிவிக்கும் வகையில் அறிவிப்பு வைக்கலாம், பயணியர் வலியுறுத்தினர்.இது குறித்து, கடந்த ஏப்., 19ம் தேதி, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. மேலும், பாலக்காடு ரயில்வே உபயோகிப்பாளர் ஆலோசனைக்குழு உறுப்பினர் ஆனந்தகுமார், பாலக்காடு கோட்ட ரயில்வே அதிகாரிகளிடம் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான வசதிகளை மேம்படுத்த வலியுறுத்தினார்.'தினமலர்' செய்தி எதிரொலியாக,ரயில்வே நிர்வாகம் வாயிலாக, ஒரு 'வீல் சேர்' மற்றும் 'ரேம்ப்' கொண்டு வரப்பட்டு, 'டிக்கெட்' பதிவு செய்யும் இடத்தில் வைக்கப்பட்டுள்ளன. பயணியர் வசதிக்காக கூடுதலாக இரண்டு 'வீல் சேர்', மற்றும் 'ரேம்ப்'கள் கோரப்பட்டுள்ளது. விரைவில் வந்து விடும் என, அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.