கீழடி விலக்கில் மேம்பால பணி துவக்கம் தினமலர் செய்தி எதிரொலி
கீழடி: கீழடி விலக்கில் தொடர்ந்து விபத்துகள் நேரிட்டு வருவது குறித்து தினமலரில் செய்திகள் வெளியான நிலையில் உயர் மட்ட மேம்பாலம் கட்டுமான பணிகள் தொடங்கியுள்ளன. மதுரையில் இருந்து பரமக்குடி வரையிலான நான்கு வழிச்சாலையில் கீழடி விலக்கு, பிரமனூர் விலக்கு, நரிக்குடி விலக்கு உள்ளிட்ட இடங்களில் அடிக்கடி விபத்துகள் நேரிட்டு வருகின்றன.இதனை தடுக்க இந்த இடங்களில் மேம்பாலம் அமைக்கப்பட வேண்டும் என தொடர்ந்து தினமலரில் செய்திகள் வெளியானதை அடுத்து தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் ஆய்வு செய்து கீழடி விலக்கில் ஒன்றரை கி.மீ., தூரத்திற்கு புதிதாக மேம்பாலம் கட்ட முடிவு செய்தனர்.45 மீட்டர் அகலம் கொண்ட சாலையை அறுபது மீட்டர் அகலம் கொண்ட சாலையாக மாற்றப்பட்டு 45 மீட்டர் அகலத்தில் மேம்பாலம் கட்டப்பட்டு தலா ஏழரை மீட்டர் அகலத்தில் இருபுறமும் சர்வீஸ் ரோடும் அமைக்கப்படுகிறது. பாலத்தின் கீழ், பக்கவாட்டு பகுதி உள்ளிட்ட இடங்களில் உயர்மின்கோபுர விளக்கு வசதியும் ஏற்படுத்தப்பட உள்ளது.கடந்த 2023ல் வருவாய்த்துறையினர் நான்கு வழிச்சாலையை ஒட்டி ஏழரை மீட்டர் அகலத்திற்கு நிலம் கையகப்படுத்தப்படுத்தினர். இரு ஆண்டுகளுக்கு பிறகு மேம்பாலம் கட்டும் பணி தொடங்க உள்ளதையடுத்து பாலம் அமைப்பதற்கான முதல் கட்ட பணிகள் தொடங்கியுள்ளன.சாலையின் இருபுறமும் கூடுதலாக சாலை அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. இதற்காக சாலையின் இருபுறமும் உள்ள கருவேல மரங்கள் உள்ளிட்ட மரங்கள் அகற்றப்பட்டு அதில் உள்ள மணல்கள் அகற்றப்படுகின்றன.புதிததாக செம்மண் மற்றும் கிராவல் மண் கொட்டப்பட்டு சாலை கெட்டிப்படுத்தப்பட்ட பின் சாலைப்பணிகள் தொடங்கும்.மேம்பாலம் அமைக்கப்பட்ட பின் ராமேஸ்வரம் செல்லும் வாகனங்கள் மேம்பாலத்தின் வழியாகவும் கீழடி, அருங்காட்சியகம் மற்றும் கீழடி வழியாக செல்லும் வாகனங்கள் சர்வீஸ் ரோடு வழியாக பாலத்தின் அடியில் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நான்கு வழிச்சாலையில் ஒன்பது மேம்பாலங்கள் உள்ள நிலையில் புதிதாக 10வது பாலமாக அமைகிறது.