டவுட் தனபாலு
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்: தமிழக சட்டசபை தேர்தலில், 108 இடங்களில் வெற்றி பெற்றும், ஆட்சி அமைக்க முடியாமல் த.வெ.க., திணறியதால், அக்கட்சிக்கு ஆதரவு என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளோம். இடதுசாரிகள் போல வி.சி.க.,வும் வெளியில் இருந்து ஆதரவு அளிக்கிறோம்; வேறு எந்த நிபந்தனையும் இல்லை. தி.மு.க., தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணியில் நீடிக்கிறோம். நாங்கள் எடுத்த முடிவை, தி.மு.க., தலைவர் ஸ்டாலினுக்கு தெரிவித்து, அவற்றை செயல்படுத்துகிறோம். டவுட் தனபாலு: இது என்ன குழப்பமான அரசியல் நிலைப் பாடு... நாளைக்கே, அரசு நிர்வாகத் தில் சிக்கல்கள் வர்றப்ப, கடந்த கால தி.மு.க., ஆட்சியை முதல்வர் விஜய் விமர்சனம் செய் தால், ஆட்சிக்கு அளிக்கும் ஆதரவை வாபஸ் வாங்கிடுவீங்களோ என்ற, 'டவுட்'தான் வருது! ****தி.மு.க., தலைவர் ஸ்டாலின்: தமிழகத்தில் பொறுப்பேற்று உள்ள புதிய அரசுக்கு வாழ்த்துகள். கடந்த ஐந்தாண்டுகளில், அனைத்து துறைகளிலும், தமிழகத்தை வளப்படுத்தி இருக்கிறோம். தி.மு.க., அரசின் திட்டங்களை, புதிய அரசு தொடர வேண்டும் என்பதே என் தனிப்பட்ட விருப்பம். இதை கவனத்தில் வைத்து, புதிய அரசு செயல்பட வேண்டும். டவுட் தனபாலு: நீங்க இப்படி சொல்றீங்க... ஆனா, முதல்வர் விஜய், '10 லட்சம் கோடி ரூபாய் கடன் சுமையில தமிழகத்தை வச்சுட்டு போயிட்டாங்க... கஜானாவை சுத்தமா துடைச்சு வச்சிருக் காங்க'ன்னு குற்றஞ்சாட்டுறாரே... இதுல எங்க இருந்து உங்க திட்டங்களை அமல்படுத்துவார் என்ற, 'டவுட்'தான் வருது! ***** தமிழக காங்., - எம்.எல்.ஏ., ராஜேஷ்குமார்: கவர்னரை கண்டித்து, காங்கிரஸ் சார்பில் மயிலாடுதுறையில் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மீது தி.மு.க., வினர் தாக்குதல் நடத்தியது, எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாத செயல். வன்முறையும் அச்சுறுத்தலும் ஜனநாயகத்திற்கு எதிரானவை. அரசியல் பண்பாட்டுக்கும் ஜனநாயக மரபுகளுக்கும் எதிரான இந்த சம்பவம் கடுமையாக கண்டிக்கத்தக்கது. டவுட் தனபாலு: அட நீங்க வேற... தி.மு.க.,வுடன் உறவில் இருந்தால், ரத்தின கம்பளம் விரித்து வரவேற்பு தருவாங்க... அதுவே, அவங்களை விட்டு பிரிஞ்சு போயிட்டால், உண்டு இல்லன்னு பண்ணிடுவாங்க... உங்க முன்னாள் தலைவர் இந்திரா மீது மதுரையில் கொலைவெறி தாக்குதல் நடத்திய தி.மு.க.,வினரிடம், ஜனநாயக மரபுகளை எல்லாம் எதிர்பார்க்க முடியுமா என்பது, 'டவுட்'தான்!