தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன்: ஏர் உழுது, களை நீக்கி, நாற்று நட்டு விவசாயம் செய்தவன் நான். எங்களுக்கு விவசாய நிலம், பம்பு செட் இருந்தது. அதற்கு கரன்ட் பில் கட்டக்கூட பணம் இல்லாத வறுமை. இரண்டு மாதத்திற்கு ஒருமுறை கரன்ட் பில் கட்ட, என் தாய் ஒவ்வொரு நகையாக கழற்றிக் கொடுத்து, கடைசி காலத்தில் மூக்கு, காதில், குண்டுமணி நகை இல்லாமல், காதில் வெறும் துடைப்பக் குச்சி குத்தியிருந்த நிலையில் உயிர் விட்டார். டவுட் தனபாலு: உங்க, 'பிளாஷ் பேக்'கை கேட்டா எல்லாரும் கண் கலங்கிடுவாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை... ஆனாலும், இன்னைக்கு நீங்க இன்ஜினியரிங் கல்லுாரி, மினரல் வாட்டர் கம்பெனி, கார், பங்களான்னு கடுமையாக, 'உழைச்சு' முன்னுக்கு வந்திருப்பதை பார்க்க, அந்த தாய் இல்லையே என்பது பெரிய குறைதான்!வி.சி., கட்சி துணை பொதுச்செயலர் வன்னியரசு: வரும் 2026 தேர்தலில், ஆட்சி, அதிகாரத்தில் பங்கு பெறக்கூடிய இடத்தில் இருக்கும் அளவுக்கு வி.சி., வலிமை பெற வேண்டும். ஆட்சி, அதிகாரத்திற்கு நம் கட்சி வர வேண்டும். திருமாவளவன் முதல்வராக வரவேண்டும் என்பதுதான் நம் கனவு. நிச்சயம் ஒருநாள், அவர் முதல்வராக வருவார்.டவுட் தனபாலு: தி.மு.க., கூட்டணியில் ஆட்சி, அதிகாரத்தில் பங்கு தர்றாங்களான்னு முதல்ல பாருங்க... அதன்பிறகு, திருமாவளவனை முதல்வராக்குவது பற்றி யோசிக்கலாம்... ஆனாலும், தி.மு.க., கூட்டணியில் இருக்கும் வரை, உங்கள் கனவுகள் கானல் நீராகவே இருக்கும் என்பதில், 'டவுட்'டே இல்லை!புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி: செய்ய முடியாதவைகளை மட்டுமே வாக்குறுதியாக, தி.மு.க., வழங்கியுள்ளது. 'நீட் தேர்வை ஒரே கையெழுத்தில் நிறுத்தி விடுவோம்' என்றனர். 'அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்துவோம்' என்றனர். நாடு முழுதும் புதிய பென்ஷன் திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இப்படி செய்ய முடியாதவைகளை சொல்வதுதான், தி.மு.க.,வின் பித்தலாட்டம்.டவுட் தனபாலு: நீங்க சொல்ற மாதிரியே, செய்ய முடியாத வாக்குறுதிகளை குடுத்து தி.மு.க.,வினர் மாட்டிக்கிட்டாங்க... ஆனா, அடுத்த வருஷம் சட்டசபை தேர்தல்ல, இதுபோன்ற வெத்துவேட்டு வாக்குறுதிகளை குடுத்து தமிழக வாக்காளர்களை வளைக்க முடியுமா என்பது, 'டவுட்'தான்!