உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டவுட் தனபாலு / டவுட் தனபாலு: நவ. 22

டவுட் தனபாலு: நவ. 22

பா.ஜ., தமிழக முன்னாள் தலைவரும், 'வீ த லீடர்ஸ்' அமைப்பின் தலைவருமான அண்ணாமலை: கடந்த தி.மு.க., ஆட்சியின்போது, 'திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்துாண், சமண துறவிகள் விளக்கேற்றுவதற்காக வைத்த துாண்' என, கடந்த ஆண்டு டிசம்பரில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் அரசு தெரிவித்தது. சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின்போது, அந்த தீபத்துாணை நில அளவைக் கல் என தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது. ஒரே விவகாரத்தில் இரு வெவ்வேறு நீதிமன்றங்களில், முரண்பட்ட நிலைப்பாடுகளை ஒரு அரசு எப்படி எடுக்க முடியும்? டவுட் தனபாலு: திருப்பரங்குன்றம் தீபத்துாண் விவகாரத்தில், தி.மு.க., அரசை தவறாக வழிநடத்திய அதே அதிகாரிகள் தான், இன்றைய த.வெ.க., அரசையும் வழிநடத்திட்டு இருக்காங்க என்பது, 'டவுட்' இல்லாம தெரியுது... ஆட்சியாளர்கள் இனியாவது உஷாராகி, குளறுபடி அதிகாரிகளை களை எடுக்கணும் என்பதிலும், 'டவுட்'டே இல்லை! lll த.வெ.க.,வைச் சேர்ந்த, தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன்: தி.மு.க., ஆட்சியில் நடந்த நுாலக முறைகேடு தொடர்பாக போலீஸ் விசாரணை நடக்கிறது; ஒருவரையும் தப்ப விட மாட்டோம். தி.மு.க., சட்டத்துறை இணை செயலர் பரந்தாமன், என்னை, காமெடி பேச்சாளர் என, அடிக்கடி கூறுகிறார். நுாலகங்களில் ஊழல் செய்வதை காட்டிலும், காமெடி பேச்சாளராக இருப்பது கேவலமான தொழில் கிடையாது. டவுட் தனபாலு: வாஸ்தவம் தான்... மக்களின் வரிப் பணத்தில் ஊழல் செய்து, 'உட்கார்ந்து' சாப்பிடுவதை விட, நின்றபடியே, 'காமெடி' செய்து, பல நுாறு பேரை சிரிக்க வச்சு சாப்பிடுவது எவ்வளவோ கவுரவமான பிழைப்பு என்பதில், 'டவுட்'டே இல்லை! lll பத்திரிகை செய்தி: அ.தி.மு.க., துாத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலரும், முன்னாள் அமைச்சருமான சண்முகநாதன், அவரது மகள் பொன்னரசி பெயரில் உள்ள கல் குவாரி, த.வெ.க., ஆட்சியில் மூடப்பட்டுள்ளது. ஆளுங்கட்சியில் இருந்தால் தான் குவாரியை இயக்க முடியும் என்பதால், சண்முக நாதனின் அனுமதியோடு, தன் கணவர் பைலட் விஜயுடன் த.வெ.க.,வில் பொன்னரசி இணைந்துள்ளதாக, அவரது எதிர் கோஷ்டியினர் புகார் தெரிவித்துள்ளனர். டவுட் தனபாலு: அ.தி.மு.க., நாளுக்கு நாள் பலவீனமாகிட்டே போகுது... இனி, ஆட்சியை பிடிப்போம் என்ற நம்பிக்கை, அதன் பொதுச்செயலர் பழனிசாமிக்கே இருக்குமான்னு தெரியலை... அதனால, 'தொழிலையாவது பார்க்கலாம்' என சண்முகநாதன் இந்த முடிவுக்கு வந்துட்டார் என்பது, 'டவுட்' இல்லாம தெரியுது! lll


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !