உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டவுட் தனபாலு / ‘டவுட்’ தனபாலு: நவ. 25

‘டவுட்’ தனபாலு: நவ. 25

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வ நாதன்: தி.மு.க.,வினரை கண்டால், ‘ஒட்டும் வேண்டாம்; உறவும் வேண்டாம்’ என, அ.தி.மு.க., தொண்டர்கள் விலகிச் செல்வர். ஆனால், சென்னையில் நடந்த திருமண விழாவில், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, தி.மு.க., தலைவர் ஸ்டாலினுடன் சிரித்து பேசி புகைப்படம் எடுத்து வெளியிட்டது, கட்சி வழிகாட்டுதலுக்கு முரணானது. பழனிசாமியின் செயல்பாடுகள், அ.தி.மு.க., நிறுவனர் எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதாவின் வழிகாட்டுதலுக்கு நேர் எதிராக உள்ளன. தொண்டர்கள் இதை ஏற்க மாட்டார்கள். ஜெயலலிதா இருக்கும்போது இப்படி நடந்திருந்தால், பழனிசாமியை கட்சியில் இருந்தே நீக்கி இருப்பார். டவுட் தனபாலு: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இன்று இருந்திருந்தால், அந்த திருமண விழா திசை பக்கமே பழனிசாமி தலைவச்சாவது படுத்திருப்பாரா என்பது, ‘டவுட்’ தான்... அதேநேரம், ‘தி.மு.க., – அ.தி.மு.க., ரகசிய கூட்டணி’ என்ற த.வெ.க.,வின் குற்றச்சாட்டை, இந்த சந்திப்பின் மூலம் பழனிசாமி உறுதிப்படுத்திட்டார் என்பதிலும், ‘டவுட்’டே இல்லை! lll அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி: த.வெ.க., ஆட்சி பொறுப்பேற்ற பின், சட்டம் – ஒழுங்கு அடியோடு சீர் கெட்டு கிடக்கிறது. அ.தி.மு.க.,விடம் உள்ள 41 எம்.எல்.ஏ.,க்களை வைத்து, இந்த ஆட்சியை எப்படி கவிழ்க்க முடியும்? மக்கள் பிரச்னையால், இந்த அரசு தானாக கவிழும். டவுட் தனபாலு: உங்களிடம் இருக்கும், 41 எம்.எல்.ஏ.,க்களை வச்சு ஆட்சியை கவிழ்க்க முடியாது என்பதில், ‘டவுட்’டே இல்லை... அதனால் தான், 59 எம்.எல்.ஏ.,க்களை வச்சிருக்கும் தி.மு.க.,வுடன் ரகசிய கூட்டணி போட்டு, ஆட்சியை கவிழ்க்க முயற்சிப்பதாக த.வெ.க.,வினர் குற்றஞ்சாட்டுறாங்க... அது உண்மையா, இல்லையா என்ற, ‘டவுட்’ வருதே! lll ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ: முந்தைய ஆட்சிகளில் லஞ்சம் வாங்கியே பழக்கப்பட்ட சில அரசு அதிகாரிகள், த.வெ.க., ஆட்சியில் லஞ்சம் கிடைக்காததால், அரசை ஸ்தம்பிக்க வைக்க முயற்சிக்கின்றனர். ஆனாலும், முதல்வர் விஜய் நேர்மையான ஆட்சியை நடத்துகிறார். டவுட் தனபாலு: ‘ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்காது’ன்னு சொல்றது போல, ‘வாங்கிய கையும் சும்மா இருக்காது’ என்பதில், ‘டவுட்’டே இல்லை... அரசை ஸ்தம்பிக்க வைக்க முயற்சிக்கும் அதிகாரிகளை அடையாளம் கண்டு, களை எடுத்தால் மட்டுமே, ஐந்து வருஷங்களுக்கு நேர்மையான ஆட்சியை தொடர்ந்து தர முடியும் என்பதிலும், ‘டவுட்’டே இல்லை! lll


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ