தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்: எதிரிகளை அண்ணாதுரை மெல்ல அடிப்பார்; எனக்கு உரசிப் பார்த்து பழக்கம் இல்லை, ஒதுங்கிப் போய்தான் பழக்கம். எச்சரிப்பது கருணாநிதியின் பழக்கம். நாக்கை அறுத்து விடுவேன் என்பது ஸ்டாலின் பழக்கம். இந்த விஷயமெல்லாம் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு தெரியாது. இனியும் இப்படியே பேசிக் கொண்டிருந்தால், அவர் சங்கடங்களை சுமக்க வேண்டும். டவுட் தனபாலு: இந்த மாதிரி எல்லாம் ஏடாகூடமா பேசத்தானே, உங்க கட்சியில சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மாதிரியான பேச்சாளர்களை வச்சிருக்கீங்க... அவர் வேலையை நீங்களே செஞ்சுட்டா எப்படி...? ஆனாலும், 'நான் மத்திய அரசிடம் எந்த வம்பும் வச்சுக்காம ஒதுங்கிப் போயிடுவேன்; ஆனா, ஸ்டாலின் நாக்கை அறுத்துடுவார்'னு தலைமையை நல்லாவே கோர்த்து விடுறீங்க என்பது, 'டவுட்'டே இல்லாம தெரியுது! பத்திரிகை செய்தி: த.வெ.க., தலைவர் விஜய் வீட்டிற்கு வெளியே திரண்டிருந்த கட்சியினர், தங்களுக்கு வேண்டியவர்களை, மாவட்ட செயலர்களாக நியமிக்க வேண்டும் என கோஷம் போட்டனர். விஜய் காரை வழிமறித்து கடிதங்களை நீட்டினர். இதனால், கோபம் அடைந்த விஜய், அவர்களை சந்திக்காமல் போய் விட்டார். கட்சி ஆபீசில், பெண் தொண்டர் ஒருவர், தன் குழந்தைகளுக்கு உதவி கேட்டு விஜயை சந்திக்க முடியாததால், எதிர்ப்பு கோஷம் போட்டார். இதனால், விஜய் அதிருப்தி அடைந்துள்ளார்.டவுட் தனபாலு: இதுக்கே அலுத்துக்கிட்டா எப்படி...? தேர்தல் நேரத்துல 'சீட்' கிடைக்காதவங்க, வீட்டு வாசலுக்கே வந்து தீக்குளிப்பாங்க... கோர்ட்ல வழக்கு போடுவாங்க... எதிர்க்கட்சிகளை கூட சமாளித்து விடலாம்... சொந்த கட்சியினர் சோதனைகளை சமாளிக்கிறது தான் விஜய்க்கு பெரிய சவாலா இருக்கும் என்பதில், 'டவுட்'டே இல்லை! வி.சி., கட்சி தலைவர் திருமாவளவன்: ஆட்சியில் பங்கு கேட்கலாம் தான். ஆனால், இப்போதைக்கு அதற்கான சூழ்நிலை இல்லை. சூழலைப் பொறுத்து கோரிக்கை வைப்போம். எங்களுடைய கட்சியையும் மக்கள் முழுமையாக ஏற்கும் காலம் வரும். அந்த காலத்தை, முன்கூட்டியே கணித்து சொல்ல முடியாது. டவுட் தனபாலு: அதுசரி... ஆட்சியில் பங்கு கேட்டாலும், தங்க தாம்பாளத்துல வச்சு நீட்டிடப் போறாங்களாக்கும்... தி.மு.க.,வின் ஆறாவது விரலாக நீங்க இருக்கும் வரை, உங்க கட்சியின் எதிர்காலத்தை அந்த கடவுளால கூட கணிக்க முடியுமா என்பது, 'டவுட்'தான்!