தமிழக முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம்: தமிழகத்துக்கு வர திட்டமிட்டிருந்த, 85,000 கோடி ரூபாய் அளவுக்கான முதலீடுகள், ஆந்திரா, தெலுங்கானா, மஹாராஷ்டிர மாநிலங்களுக்கு சென்றுள்ளன. ஆனால், கொலைகாரர்களும், கொள்ளைக்காரர்களும் தமிழகத்தை நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர். இந்நிலை மாற, தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்செய்யப்பட வேண்டும். டவுட் தனபாலு: எல்லா தொழில்களும், அண்டை மாநிலங் களுக்கு போயிட்டே இருந்தால், தமிழகத்தை தேடி கொள்ளைக்காரங்களும் வரமாட்டாங்க... ஏன்னா, தொழில் வளம் இல்லாத தமிழக மக்களிடம் எதுவும் தேறாதுன்னு, அவங்களும் அண்டை மாநிலங்களுக்கு படையெடுத்து போயிடுவாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!வி.சி., கட்சி தலைவர் திருமாவளவன்: உச்ச நீதிமன்ற தீர்ப்பால், கவர்னர் ரவிக்கு பாடம் புகட்டப்பட்டிருக்கிறது. தி.மு.க., அரசுக்கு முட்டுக்கட்டை போடவும், நெருக்கடிக்கு உள்ளாக்கவும், செயலிழக்கச் செய்யவும் முடியும் என, கவர்னர் நம்பினார். அவருக்கு தோதான மண் தமிழகம் இல்லை என, சட்டசபையிலும், நீதிமன்றத்திலும் தொடர்ந்து நிரூபித்து வருகிறோம்.டவுட் தனபாலு: உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு இவ்வளவு வரவேற்பு தெரிவிக்கும் நீங்க, 'டாஸ்மாக்' தொடர்பான வழக்கில், தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவிச்சதுக்கு மட்டும் ஏன் கருத்து தெரிவிக்கலை... கூட்டணி தர்மம் குறுக்கே விழுந்து தடுக்குதோ என்ற, 'டவுட்'தான் வருது!இந்திய கம்யூ., மாநில செயலர் முத்தரசன்: மத்திய அரசுக்கு எதிராக, சட்டசபையில் தமிழக அரசு கொண்டு வரும் தீர்மானங்களுக்கு ஆதரவாக அனைவரும் பேசுகின்றனர். ஆனால், இந்த மாதிரி விஷயங்களில் அ.தி.மு.க., மவுனமாக இருக்கிறது. தமிழக அரசுக்கு எதிராக நடந்து கொள்ளும் மத்திய அரசை எப்படி எதிர்கொள்வது எனப் புரியாமல், அ.தி.மு.க., விழி பிதுங்கி நிற்கிறது. இதற்கெல்லாம், பா.ஜ., மிரட்டலுக்கு அடிபணிய வேண்டிய நிர்பந்தம், முன்னாள் முதல்வர் பழனிசாமிக்கு இருப்பதுதான் காரணம்.டவுட் தனபாலு: தி.மு.க., அரசு கொண்டு வரும் தீர்மானங்கள் எல்லாமே காலம் கடந்தவை என்பது, மூத்த அரசியல்வாதியான இவருக்கு தெரியாதா... நாலு வருஷம் ஆட்சியில் இருந்தும் செய்ய முடியாதவற்றை, தீர்மானங்கள் போட்டு திசை திருப்பும் தி.மு.க.,வின் தந்திரத்துக்கு, எதிர்க்கட்சியும் ஆதரவு தரணும்னு கேட்பதில் ஏதாவது நியாயம் இருக்கா என்ற, 'டவுட்'தான் வருது!