தமிழக முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம்: கடந்த 2021ல், தி.மு.க., வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், தமிழகத்தில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும், 1.25 லட்சம் ரூபாய் கடனோடு பிறப்பதாக தெரிவித்து, அதை சீர்செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என, வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், ஆட்சிக்கு வந்தபின், கடனை ஏகத்துக்கும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. 2021 மார்ச் மாதம் 4.85 லட்சம் கோடி ரூபாயாக இருந்த தமிழக அரசின் கடன், தி.மு.க., ஆட்சி முடிவில் 9.29 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. டவுட் தனபாலு: கடந்த 2011ல் தி.மு.க., ஆட்சியை விட்டு இறங்கியப்ப, 1.14 லட்சம் கோடிக்கு தான் கடன் இருந்துச்சு... அடுத்து 10 ஆண்டு அ.தி.மு.க., ஆட்சியில், இதை நாலு மடங்கு, அதாவது 4.85 லட்சம் கோடியாக்கியது ஏன்... எந்த ஆட்சி வந்தாலும், கடன் சுமை ஏறுமே தவிர இறங்காது என்பதில், 'டவுட்'டே இல்லை!பத்திரிகை செய்தி: தமிழக இளைஞர் காங்கிரசுக்கு புதிய உறுப்பினர் சேர்ப்பு நடவடிக்கைகள், கடந்த ஜன., 18ல் துவங்கி, பிப்., 27ல் முடிந்தன; இதில், 3.82 லட்சம் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு உள்ளனர். அதில், பெயர், முகவரி, மொபைல் போன் எண்கள் போலியாக தரப்பட்டுள்ளது தெரியவந்தது. அவர்கள் எல்லாம் போலி உறுப்பினர்கள் என உறுதி செய்யப்பட்டதை அடுத்து, 1.52 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர்.டவுட் தனபாலு: அது சரி... ஒட்டுமொத்த தமிழக காங்கிரசிலும் கூட இத்தனை உறுப்பினர்கள் இருப்பாங்களா என்பது, 'டவுட்'தான்... கட்சியில் பதவி வாங்குறதுக்காக, மேலிடத்தை ஏமாத்துற இவங்களை நம்பி, தமிழகத்தில் காமராஜர் ஆட்சி அமைக்க முடியுமா என்பது அதைவிட பெரிய, 'டவுட்!'தமிழக கனிமவளத் துறை அமைச்சர் ரகுபதி: பச்சைப்பொய்கள் பேசுவதில், பழனிசாமிக்கு நிகர் பழனிசாமி தான் என்பதை, தமிழக மக்கள் நன்கு அறிவர். பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தீர்ப்பு கிடைத்ததற்கு, வெட்கமே இல்லாமல் தான்தான் காரணம் என, பெருமை பேசுகிறார் பழனிசாமி. உண்மையில் வழக்குகூட பதிவு செய்யாமல், குற்றவாளிகளை காப்பாற்றத் துடித்தது தான் பழனிசாமி செய்த கேவலமான சாதனை.டவுட் தனபாலு: அது இருக்கட்டும்... சென்னை அண்ணா பல்கலை மாணவி பாலியல் பலாத்கார சம்பவத்தில், உங்க ஆட்சியில் துரிதமா நடவடிக்கை எடுத்தீங்களா... குற்றவாளியை காப்பாற்ற முயற்சித்தது, பாதிக்கப்பட்ட மாணவி அடையாளத்தை பகிரங்கப்படுத்தியதுன்னு ஏகப்பட்ட தவறுகளை பண்ணிட்டு, பழனிசாமி மீது குற்றம் சாட்டுவது முறையா என்ற, 'டவுட்' எழுதே!