தமிழக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி: அமலாக்கத் துறை, 'டாஸ்மாக்' நிர்வாக இயக்குநர் மற்றும் அலுவலர்கள் வீடுகளில் சோதனை மேற்கொண்டுள்ளது. இதில், எந்த ஆதாரங்களும் கிடைக்கவில்லை. அமலாக்கத் துறை மேற்கொண்டு வரும் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளை கண்டிக்கிறேன். இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக தேவையான அனைத்து சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு, நம் அலுவலர்களுடன் தமிழக அரசு எப்போதும் துணை நிற்கும்.டவுட் தனபாலு: 'டாஸ்மாக்'கில் என்ன நடந்துச்சோ தெரியாது... அப்படி ஏதாவது தில்லுமுல்லுகள் நடந்திருந்தாலும், அதை செய்தவங்க இப்ப வெளியில நிம்மதியா இருக்காங்க... கடைசி காலத்துல, கூடுதல் பொறுப்பா அந்த துறைக்கு பொறுப்பேற்றுள்ள நீங்கதான் எல்லா பழி, பாவத்தையும் சுமக்கணும் என்பதில், 'டவுட்'டே இல்லை! தமிழக கனிமவள துறை அமைச்சர் ரகுபதி: மத்திய அரசின், 'ரெய்டு' நடவடிக்கையால், தனக்கோ, தன் மகனுக்கோ, சம்பந்திக்கோ பாதிப்பு வந்து விடக்கூடாது என்ற பயத்தில் தான் பா.ஜ.,வோடு கூட்டணி வைத்து உள்ளார், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி. ரெய்டுகளுக்கு பயந்து, தன் கட்சியையே டில்லியிடம் அடகு வைத்துவிட்டு வந்தவருக்கு மாநில உணர்வு பற்றி பேச கொஞ்சம் கூட தகுதி கிடையாது. பழனிசாமி அடுத்த தேர்தலிலும் தோற்பார். டவுட் தனபாலு: பழனிசாமி ரெய்டுக்கு பயந்தாரோ, இல்லையோ... தமிழகத்தில், அமலாக்கத் துறை அடுத்தடுத்து நடத்துற அதிரடி ரெய்டுகளை பார்த்தால், வர்ற சட்டசபை தேர்தல்ல தி.மு.க.,வே, பா.ஜ., கூட்டணிக்கு போயிடுமோ என்ற, 'டவுட்' கூட வருது! பா.ம.க., கவுரவ தலைவர் ஜி.கே.மணி: அன்புமணி - ராமதாஸ் இடையே பிரச்னை ஏற்பட நான் தான் காரணம் என சொல்வது, என்னை கத்தியால் குத்துவது போல உள்ளது. 45 ஆண்டுகளாக இந்த கட்சியில் உள்ளேன். ஒரு உயிருக்குக்கூட தீங்கு நினைத்ததில்லை. பல கட்சிகளில் இருந்தும் எனக்கு அழைப்புகள் வந்தன. ஆனால், அந்த வாய்ப்புகளை எல்லாம் புறம்தள்ளி விட்டுதான், பா.ம.க., வில் பயணிக்கிறேன். இந்தப் பயணம் எனக்கு சுகமானது.டவுட் தனபாலு: பா.ம.க., தலைமை மீதான உங்க விசுவாசத்தை யாருமே குறை சொல்ல முடியாது... ஆனா, உங்க மகன் தமிழ் குமரனை கட்சிக்குள்ள வந்த வேகத்தில் வெளியே அனுப்பியது யார்...? பெற்ற அப்பாவையே ஓய்வு எடுக்கச் சொல்ற அன்புமணியும், அவரது ஆதரவாளர்களும் உங்களை மட்டும் விட்டு வைப்பாங்களா என்பது, 'டவுட்'தான்!