தமிழக துணை முதல்வர் உதயநிதி: தி.மு.க.,வை யாரும் மிரட்டவும் முடியாது; அடிமையாக்கவும் முடியாது. அமலாக்கத்துறை என சொல்லப்படும் ஈ.டி.,க்கெல்லாம் நாங்கள் ஒருநாளும் பயப்பட மாட்டோம்; ஏன், பிரதமர் மோடிக்கும் கூட பயப்பட மாட்டோம். தமிழகத்தின் உரிமைக்காக தொடர்ந்து குரல் எழுப்பிக் கொண்டே இருப்போம். மிரட்டல், உருட்டலுக்கெல்லாம் தி.மு.க.,வைச் சேர்ந்தோர் ஒருநாளும் அஞ்ச மாட்டோம். ஏனென்றால், தி.மு.க., என்பது அடிமை கட்சி அல்ல. டவுட் தனபாலு: நீங்க,தமிழகத்துல இப்படி முழங்கிட்டு இருந்த நேரத்துல, டில்லியில உங்க தந்தை ஸ்டாலின், பிரதமர் மோடியை பார்த்து, 10 நிமிடங்கள் பேசி, தமிழகத்தின் கோரிக்கைகளை வலியுறுத்திட்டு வந்திருக்காரு... அந்த 10 நிமிடங்களும் தமிழகத்தின் கோரிக்கைககள் தொடர்பாக மட்டும் தான் பேசினாரா என்ற, 'டவுட்' எழுதே!வி.சி., கட்சி தலைவர் திருமாவளவன்: 'தி.மு.க., கூட்டணியில் இருக்கும் திருமா வெளியே வருவார்' என, நையாண்டியாகத்தான், தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்; கோரிக்கையாகவோ, அழைப்பாகவோ விடுவிக்கவில்லை.டவுட் தனபாலு: அது சரி... தி.மு.க., கூட்டணியில் பா.ம.க., ஐக்கியமாகலாம் என்ற தகவல்கள், அரசியல் வட்டாரத்தில் உலா வருது... ஒருவேளை அப்படி எதுவும் நடந்துட்டா, முறைப்படி கோரிக்கையோ, அழைப்போ விடுத்தால், பா.ஜ.,வின் தே.ஜ., கூட்டணியில் அங்கம் வகிக்கவும் நீங்க தயாராகிட்டு இருக்கீங்களோ என்ற, 'டவுட்'தான் வருது!முன்னாள் ராணுவ வீரர்கள் சங்கத்தின் தலைவர் நவநீதம் கிருஷ்ணன்: அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜு, எந்த இடத்தில் இருந்து ராணுவ வீரர்களை அவதுாறாக பேசினாரோ, அதே இடத்திற்கு வந்து நிருபர்கள் மத்தியில் மன்னிப்பு கோர வேண்டும். இல்லையென்றால், அவரதுவீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம். டவுட் தனபாலு: செல்லுார் ராஜு, தன் பேச்சுக்கு சமூக வலைதளம் மூலம் வருத்தம் தெரிவிச்சுட்டாரு... அந்த பிரச்னையை அதோட விடுங்க... இன்னும், அவர் வீடு தேடி போய் ஆர்ப்பாட்டம், போராட்டம் எல்லாம் பண்றது, அவருக்கு தான் கூடுதல் விளம்பர வெளிச்சத்தை ஏற்படுத்தும் என்பதில், 'டவுட்'டே இல்லை!