அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி: அ.தி.மு.க., கூட்டணியை கண்டு, தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் தி.மு.க., நிர்வாகிகளே அக்கட்சிக்கு ஆப்பு வைக்க உள்ளனர். 2026 சட்டசபை தேர்தலில், தி.மு.க., அதன் கூட்டணி கட்சிகள், 20 இடங்களில் மட்டுமே வெற்றி பெறும். டவுட் தனபாலு: தி.மு.க., வினர், '200 இடங்களில் வெற்றி உறுதி'ன்னு சொல்றாங்க... நீங்க, அதுல ஒரு சைபரை கட் பண்ணிட்டீங்களே... அது இருக்கட்டும்... தி.மு.க., ஜெயிக்க வாய்ப்புள்ள அந்த, 20 தொகுதிகளா பார்த்து, கூட்டணி கட்சியான பா.ஜ.,வுக்கு தள்ளி விட்டுருவீங்களோ என்ற, 'டவுட்'டும் வருது!தமிழக அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு: மணிப்பூரில் கொஞ்ச காலம் ஓய்ந்திருந்த கலவரம், மீண்டும் துவங்கி இருக்கிறது. அங்கே, மத்திய அரசும், பா.ஜ.,வும் என்ன செய்து கொண்டிருக்கிறது? இதேபோல பா.ஜ., ஆளும் பல மாநிலங்களிலும் அமைதியான வாழ்க்கைக்கு உத்தரவாதமில்லாத நிலை உள்ளது. ஆனால், தமிழகத்தில் எவ்வித புகார் வந்தாலும், அதன்மீது உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிடுபவர் நம்முடைய முதல்வர் ஸ்டாலின். அப்படியொரு முதல்வரை தமிழகம் பெற்றுள்ளது.டவுட் தனபாலு: புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கிறது தானே போலீசார் மற்றும் அரசு அதிகாரி களின் அடிப்படை கடமை... அதை செய்யவே, முதல்வர் உத்தரவை எதிர்பார்த்து அவங்க காத்துட்டு இருக்காங்க என்றால், உங்க நிர்வாகம் சரியாதான் நடக்குதா என்ற, 'டவுட்' வருதே!த.வெ.க.,வின் திருவண்ணா மலை தெற்கு மாவட்டச் செயலர் பாரதிதாசன்: திருவண்ணாமலையில் நான் கட்டியிருக்கும் புதிய வீட்டு கிரஹபிரவேச நிகழ்ச்சிக்கு நண்பர்கள், கட்சியினர் உள்ளிட்டோரை அழைத்தது போல், குடும்ப நண்பரான பொதுப்பணித் துறை அமைச்சர் வேலுவையும் அழைத்தேன்; அவரும் வந்தார். அமைச்சர் என்பதால், அவருக்கு மரியாதை செய்யும் வகையில், 20 ரூபாய் நோட்டு மாலை அணிவித்தேன். தவறுதலாக நடந்த விஷயம் அது; அச்செயலுக்காக வருந்துகிறேன். அதற்காக, தலைவர் விஜயிடம் மன்னிப்பு கோருகிறேன். வரும் காலங்களில், இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு மாற்றுக் கட்சியினரை அழைக்க மாட்டேன். டவுட் தனபாலு: 'மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு' என்றார், அண்ணாதுரை... ஆனா, குடும்ப விழாவுக்கு, அமைச்சர் நண்பரை அழைச்சதுக்கே உங்க பதவிக்கு வேட்டு வைக்க பார்க்கிறாங்க என்பது நல்லாவே தெரியுது... அதான் இப்படி பதறியடிச்சுட்டு மன்னிப்பு கேட்கிறீங்க என்பதும், 'டவுட்'டே இல்லாம புரியுது!