நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: மலையடிவாரத்தில் கால்நடைகளை மேய்ப்பதால், வனத்துக்கு பாதிப்பு ஏற்படும் எனக்கூறி தடை விதிக்கின்றனர். ஆடு, மாடுகளை மேய்ப்பது அவமானம் அல்ல; வெகுமானம் என்பதை உணராதவரை, நாட்டின் பொருளாதாரம் வளராது. வரும், ஆக., 3ல் தேனி மலையடிவாரத்தில், நானே மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்வேன். -டவுட் தனபாலு: பனை மரத்தில் ஏணி கட்டி ஏறி, கள் இறக்குனீங்களே... கள்ளுக்கான தடை நீங்கிடுச்சா... அந்த மாதிரி, இப்ப மலையடிவாரத்தில் மாடு மேய்க்க போறேன்னு கிளம்புறீங்க... இதனாலும், எந்த பலனும் கிடைக்க போறதில்லை... இதை எல்லாம், மக்களுக்கு பலன் அளிக்கும்னு நம்பி பண்றீங்களா அல்லது வீண் விளம்பரம் தேடிக்கிறீங்களா என்ற, 'டவுட்' தான் வருது!தமிழக, பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன்: சுங்கச்சாவடி கட்டணத்தை கூட தமிழக அரசு போக்குவரத்து கழகம் ஒழுங்காக செலுத்தவில்லை. சுங்கச்சாவடியை அரசு பேருந்துகள் கடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டு, ஐகோர்ட் வரை பிரச்னை சென்றுள்ளது. பல கோடி ரூபாய் பாக்கியை செலுத்துமாறு கோர்ட் உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமல்ல... டீசல், பெட்ரோல் போட்டு விட்டு, அதற்கான பணத்தையும் கொடுக்காமல் உள்ளனர். இதையெல்லாம் சரி செய்யாமல், முதல்வர் ஸ்டாலின், 'ரோடு ஷோ' என, ஏமாற்று ஷோ நடத்திக் கொண்டிருக்கிறார். டவுட் தனபாலு: போக்குவரத்து கழகங்களுக்கு புதிய பஸ்கள், மின்சார பஸ்களை வாங்கி குவிக்கிறதுல தான் அக்கறை காட்டுறாங்களே தவிர, இருக்கும் பஸ்களை முறையா இயக்க மாட்டேங்கிறாங்களே... ஒரு வேளை புதிய பஸ்கள் வாங்குறதுல தான், 'பலன்'கள் நிறைய கிடைக்குமோ என்ற, 'டவுட்' தான் வருது!பா.ம.க., தலைவர் அன்புமணி: மதுரை மாநகராட்சியில் சொத்து வரியை குறைத்து நிர்ணயம் செய்ததில், 200 கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இதில், தி.மு.க.,வைச் சேர்ந்த மண்டல குழு தலைவர்களும், நிலைக்குழு தலைவர்களும் ஈடுபட்டுள்ளனர். மேயரின் தனி உதவியாளரும் மாற்றப்பட்டுள்ளார். மாநகராட்சி அதிகாரிகள், எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த முறைகேடு வழக்கை, சி.பி.ஐ.,க்கு மாற்ற வேண்டும்.டவுட் தனபாலு: எந்த ஆட்சியிலும், அதிகாரிகள் மட்டும் ஊழல் பண்ணி பணத்தை பாக்கெட்டில் போட்டுக்க முடியாது... அரசியல்வாதிகளின் ஊழலுக்கு துணையா இருந்து, குறிப்பிட்ட சதவீத பங்கை மட்டும் தான் அதிகாரிகள் வாங்குவாங்க... ஆனா, ஊழல் அம்பலமாகிட்டா அதிகாரிகள் மட்டும் தான் பலிகடா ஆவாங்க என்பதற்கு, மதுரை மாநகராட்சி சம்பவமே சாட்சி என்பதில், 'டவுட்'டே இல்லை!