டவுட் தனபாலு
தமிழக சமூகநலத் துறை அமைச்சர் கீதா ஜீவன்: நம் கட்சியின் ராஜ்யசபா எம்.பி., திருச்சி சிவா, காமராஜர் குறித்து தெரி வித்த கருத்து தொடர்பாக, பா.ஜ., அரசு செய்யும் சதி வலையில், நம் செயல் வீரர்கள் விழுந்து விடக் கூடாது. தி.மு.க., கூட்டணி கொள்கை ரீதியில் வலுவான கூட்டணியாக உள்ளது. இந்த கூட்டணியை எப்படி உடைப்பது, ஓட்டுகளை எப்படி பிரிப்பது என்பது தான், பா.ஜ.,வின் எண்ணமாக இருக்கிறது. டவுட் தனபாலு: 'காமராஜர் குறித்து திருச்சி சிவா பேசியது தவறு'ன்னு சொல்லி, அவர் மீது உங்க கட்சி தலைமை நடவடிக்கை எடுத்திருந்தால், 'டவுட்'டே இல்லாம பாராட்டலாம்... ஆனா, ஒரு வார்த்தை கூட அவரை கண்டிக்காம விட்டுட்டு, பா.ஜ., மீது பழிபோடுவது சரியா என்ற, 'டவுட்' வருதே! தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன்: பிரதமரின் மக்கள் மருந்தகங்களில், 2,000க்கும் மேற்பட்ட, 'ஜெனரிக்' மருந்துகள் விற்கப்படுகின்றன. ஆனால், முதல்வர் மருந்தகங்களில், 300 மருந்துகள் மட்டுமே உள்ளதாகவும், விற்பனை யாகாத மருந்துகள் தான் அதிகளவில் உள்ள தா கவும் கூறுவது, தி.மு.க., அரசின் நிர்வாக குளறுபடிகளை காட்டுகிறது. தமிழகம் முழுதும் செயல்பட்டு வரும், 1,000 முதல்வர் மருந்தகங்களில், அனைத்து மருந்துகளும் கிடைக்கிறதா என்பதை ஆய்வு செய்து, அதில் உள்ள செயல்பாட்டு சிக்கல்களை தீர்க்க, தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். டவுட் தனபாலு: தமிழகத்தில், 1,000 முதல்வர் மருந்தகங்களும் முறையாக செயல்படுகிறதா என்பதே, 'டவுட்' தான்... மத்திய அரசுக்கு போட்டியாக செயல்பட நினைத்து, புலியை பார்த்து பூனை சூடு போட்ட கதையாக தான் இந்த திட்டம் இருக்கு என்பதிலும், 'டவுட்'டே இல்லை! வி.சி., கட்சி தலைவர் திருமாவளவன்: எங்களுக்கு, பா.ஜ., வுடன் தான் கொள்கை பகை; அ.தி.மு.க.,வுடன் அல்ல. தி.மு.க.,வை அதிகாரத்தில் இருந்து வெளியேற்றுவதை விட, அ.தி.மு.க.,வை பலவீனப்படுத்தி, தமிழகத்தின் இரண்டாவது பெரிய கட்சியாக, பா.ஜ., நினைக்கிறது. அ.தி.மு.க., உடனான தோழமை உணர்வு இன்னும் இருக்கிறது. அக்கட்சி பாழ்பட்டு விடக்கூடாது என்ற பொறுப்புணர்வுடன் தான் சுட்டிக்காட்டுகிறோம்; அ.தி.மு.க., மீதோ, பழனிசாமி மீதோ காழ்ப்புணர்ச்சி இல்லை. டவுட் தனபாலு: 'தி.மு.க., கூட்டணியில் பல வருஷங்களா நீடிக்கிறோம்... அவங்க உறவால, எங்க கட்சிக்கு வளர்ச்சி தான்'னு ஒரு பக்கம் சொல்றீங்க... மறுபக்கம், 'அ.தி.மு.க., தோழமை தொடருது'ன்னு சொல்றீங்க... 'பாலுக்கும் காவல்; பூனைக்கும் தோழன்' என்ற பழமொழிக்கு சரியான உதாரணம் நீங்க தான் என்பதில், 'டவுட்'டே இல்லை!