மேலும் செய்திகள்
பா.ஜ., கூட்டணிக்கு 'குட்பை'
01-Aug-2025
முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் அணியில் உள்ள முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன்: பன்னீர்செல்வம் தலைமையில் நடந்த உயர்நிலை கூட்டத்தில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவது என, முடிவெடுத்துள்ளோம். தற்போதைய நிலையில், நாங்கள் எந்த கட்சியுடனும் கூட்டணியில் இல்லை. 2026 சட்டசபை தேர்தலில் சரியான கூட்டணி அமையும். யாரையும் வீழ்த்த வேண்டும் என்பது எங்களது குறிக்கோள் அல்ல. யாரையெல்லாம் வாழ்த்த வேண்டும் என்பதே, எங்களது குறிக்கோள். டவுட் தனபாலு: அது சரி... 'யாரையும் வீ ழ்த்தும் அளவுக்கு எங்க அணிக்கு பலம் இல்லை... அதனால, ஜெயிக்கிற அணியில் சேர்ந்து கூட்டத்தோட கோவிந்தா போட போறோம்' என்பதை வெளிப்படையா சொல்ல முடியாம, 'வாழ்த்த போறோம்'னு வார்த்தை ஜாலம் காட்டுறீங்க என்பது, 'டவுட்' இல்லாம தெரியுது! விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்: 'ஆணவ கொலைகள் தடுப்பு சட்டத்தை இயற்றலாமா' என, மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியது. இதில், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் கருத்து சொல்லாமல் இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. மேலும், ஆணவ கொலை தொடர்பாக, உச்ச நீதிமன்றம் வழங்கிய வழிகாட்டுதல்களையும் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் பின்பற்றவில்லை. டவுட் தனபாலு: 'தமிழகம் ஈ.வெ.ரா.,வின் மண்... சமூக நீதியை கடைப்பிடிக்கிற மாநிலம்' என்றெல்லாம் திராவிட மாடல் ஆட்சியாளர்கள் முழங்குறாங்க... நீங்களும் அதுக்கு பின்பாட்டு பாடுறீங்க... ஆனா, ஆணவ கொலைகளை தடுக்கும் விஷயத்தில், தமிழக அரசின் நடவடிக்கை அதற்கெல்லாம் நேர்மாறாக இருப்பது, இப்பதான் உங்களுக்கு தெரிஞ்சுதா என்ற, 'டவுட்' வருதே! நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: தமிழகம் உட்பட இந்தியா முழுதும் ஜாதி, மதம் அடிப்படையில் தான் அரசியல் நடக்கிறது. பா.ஜ.,வை மதவாத கட்சி என கூறிக் கொண்டு, இந்த ஜாதிக்கு இத்தனை தொகுதி, அந்த ஜாதிக்கு இத்தனை தொகுதி என, ஒதுக்கி கொண்டிருக்கின்றனர். எங்கள் ஆட்சியில் இந்த நிலையை மாற்றி அமைக்கும் காலம் வரும். அப்போது, ஜாதிய கொலைகள் நடந்தால், என்னை அழைத்து கேளுங்கள். டவுட் தனபாலு: ஜாதி, மத பேதங்கள் இல்லாத சமூகம் அமைவது நல்ல விஷயம் தான்... வர்ற சட்டசபை தேர்தல்ல, பெரும்பான்மை சமுதாயத்தினர் வசிக்கும் பகுதியில், உங்க கட்சியில் அந்த சமுதாயத்தினருக்கு சீட் தராம, மாற்று சமுதாயத்தை சேர்ந்தவங்களை நிறுத்துவீங்களா என்ற, 'டவுட்' எழுதே!
01-Aug-2025