உள்ளூர் செய்திகள்

டவுட் தனபாலு

ம.தி.மு.க., துணை பொதுச்செயலர் மல்லை சத்யா: 'பா.ஜ.,வுடன் கூட்டணி இல்லை' என, வைகோ அடிக்கடி கூறி வருகிறார். கடைசி வரை, அவர் அதில் உறுதியாக இருக்க வேண்டும். கடந்த 2001, 2006 சட்டசபை தேர்தல்களின்போது, தி.மு.க., கூட்டணியில் இருந்து, கடைசி நேரத்தில் அவர் ஓடியதை இன்றும் யாரும் மறக்கவில்லை. அதுபோல, 2026 சட்டசபை தேர்தலின்போதும் வைகோ ஓடிவிடக் கூடாது. டவுட் தனபாலு: கடந்த, 2001, 2006 சட்டசபை தேர்தல் களின் போது, தி.மு.க., அணியில் இருந்து வைகோ ஓடியபோது, அவருடன் சேர்ந்து நீங்களும் தானே ஓடுனீங்க... அப்ப கம்முன்னு இருந்துட்டு, இப்ப வைகோவை பிடிக்காம போனதால, அவரை கிண்டல் பண்ணுவது சரியா என்ற, 'டவுட்' வருதே!  தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலர் ஆனந்த்: த.வெ.க.,வினருக்கு ஒரே தலைவர் விஜய் மட்டுமே. வரும் 2026 சட்டசபை தேர்தலில், நாம் அனைவரும் ஒன்றுபட்டு உழைத்து, விஜயை முதல்வராக்குவதே நம் குறிக்கோள். நம் நிகழ்ச்சிகள், விளம்பர பேனர்களில், கட்சித் தலைவர் விஜய் படம் மட்டுமே இடம்பெற வேண்டும்; என் படத்தை யாரும் பயன்படுத்தக் கூடாது. மீறி பயன்படுத்தினால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். டவுட் தனபாலு: 'படத்தை பயன்படுத்தக் கூடாது'ன்னு சொன்னா மட்டும் போதுமா... அடிமட்ட தொண்டர்களின் குறைகள் எதுவும், உங்களை தாண்டி விஜய் காதுக்கு போறதே இல்லை என்ற குற்றச்சாட்டும் பரவலா இருக்கே... விஜய்க்கும், தொண்டர்களுக்கும் குறுக்கே நந்தியாக நிற்காமல், பாலமா இருந்தால், 'டவுட்'டே இல்லாம உங்களை பாராட்டலாம ்!  பத்திரிகை செய்தி: தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில், 'நலம் காக்கும் ஸ்டாலின்' முகாம் துவக்க விழா மேடையில், நலத்திட்ட உதவிகள் வழங்கியபோது தி.மு.க.,வைச் சேர்ந்த தேனி எம்.பி., தங்க தமிழ்செல்வன், ஆண்டிபட்டி எம்.எல்.ஏ., மகாராஜன் இருவரும் ஒருவருக்கொருவர், 'முட்டாப்பயலே' என ஒருமையில் பேசி வாய்த் தகராறில் ஈடுபட்டனர். டவுட் தனபாலு: அது சரி... 'ஓரணியில் தமிழகம்' என்ற பெயரில், மாநிலம் முழுக்க மக்களை திரட்ட முதல்வர் ஸ்டாலின் உத்தரவு போட்டிருக்காரு... ஆனா, ஒரே மாவட்டத்தில் இருக்கும் எம்.பி., - எம்.எல்.ஏ., கூட ஓரணியா இல்லையே... 'இந்த ரெண்டு பேருக்கும் ஓட்டு போட்டது தப்போ'ன்னு தேனி மாவட்ட மக்கள் யோசிக்க துவங்கியிருப்பாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை! 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை