உள்ளூர் செய்திகள்

டவுட் தனபாலு

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: அன்புமணி பிரச்னைக்கு, கடந்த 11ம் தேதியுடன் தீர்வு ஏற்பட்டு விட்டது. 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கான கூட்டணி குறித்த முடிவை விரைவில் அறிவிப்பேன். அந்த அதிகாரத்தை கட்சியின் பொதுக்குழு எனக்கு கொடுத்துள்ளது. தமிழகத்திற்கு நிறைய முதலீடுகள் குவிய வேண்டும். அதற்கு முதல்வர் ஸ்டாலின் முயற்சி செய்கிறார். டவுட் தனபாலு: உங்க மகன் அன்புமணி, தி.மு.க., அரசை கடுமையா தாக்கி பேசுறாரு... அதனால, தே.ஜ., கூட்டணிக்கு அவர் போவது உறுதியாகிடுச்சு... அவர் இருக்கும் இடத்தில் நீங்க இருக்க மாட்டீங்க என்பதால், உங்களுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு தி.மு.க., கூட்டணி தான்... அதனால தான் முதல்வரை பாராட்டுறீங்க என்பதும் தெரியுது... ஆனா, தி.மு.க., அணி யில் இருக்கும் திருமாவளவன் உங்க வரவை ஏத்துக்குவாரா என்பது, 'டவுட்' தான்! ***************** தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன்: ஒரு கூட்டணியில் இருக்கும் அனைத்து கட்சிகளும், கொள்கை அளவில் இருப்பதில்லை; தேர்தலுக்காக சில கட்சிகளுடன் கூட்டணி வைக்கப்படும். முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்துடன், சமீபத்தில் கூட தொலைபேசியில் பேசினேன். தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது; அதற்குள் நல்ல முடிவு வரும். டவுட் தனபாலு: பிரதமர் மோடி துாத்துக்குடி வந்தப்ப, 'அவரை சந்திக்க நேரம் வாங்கி தாங்க'ன்னு கேட்கிறதுக்காக, உங்களுக்கு ஆறு முறை பன்னீர்செல்வம் போன் போட்டிருந்தாரே... அப்ப, அவரை கண்டுக்காம இருந்துட்டு, இப்ப உங்க கூட்டணியில் இருந்து பன்னீர்செல்வம் வெளியேறிய பிறகு பேசி என்ன பிரயோஜனம் என்ற, 'டவுட்' தான் வருது! ***************** தமிழக பா.ஜ., மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்: பிரதமர் மோடி மணிப்பூருக்கு சென்றுள்ளார். அவருக்கு அங்கே உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. இதை, தி.மு.க.,வினர் விமர்சிக்கின்றனர். ஆனால், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து, 67 பேர் இறந்தனர்; அந்த குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்ல, இன்று வரை முதல்வர் ஸ்டாலின் செல்லவில்லை. டவுட் தனபாலு: மணிப்பூரில் கிட்டத்தட்ட ரெண்டரை வருஷத்துக்கு முன்னாடி கலவரம் வெடிச்சது... அப்ப எல்லாம் பிரதமர் மோடி அங்க போனாரா... அந்த மாதிரி, முதல்வர் ஸ்டாலினும் தேர்தல் நெருக்கத்துல, கள்ளக்குறிச்சிக்கு கண்டிப்பா போவார் என்பதில், 'டவுட்'டே இல்லை! *****************


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை