டவுட் தனபாலு
வி.சி., கட்சி தலைவர் திருமாவளவன்: தி.மு.க., கூட்டணியில் இருந்ததால் தான் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு அங்கீகாரம் கிடைத்தது. வி.சி., கட்சி, ஜாதி கட்சி கிடையாது. இது, கொள்கை அடிப்படையில் உரு வான கட்சி. புதிதாக வந்த கட்சி கள் எல்லாம், மாலை, 6:00 மணிக்கு மேல் கூட்டம் நடத்த மாட்டார்கள்; பேசவும் மாட்டார்கள். குறிப்பாக, சனிக்கிழமை மட்டும் கூட்டம் நடத்துவர். ஆனால், எந்த நேரமும் மக்களோடு மக்களாக இருப்பது, தி.மு.க., கூட்டணி கட்சியினர் தான். டவுட் தனபாலு: சனிக்கிழமை மட்டும் கூட்டம் நடத்துற விஜயை தான் நீங்க கிண்டல் பண்றீங்க என்பது, 'டவுட்'டே இல்லாம தெரியுது... தி.மு.க.,வால் உங்க கட்சிக்கு அங்கீகாரம் கிடைச்சிருக்குன்னு சொல்றீங்க... ஆனா, 'அதிகாரத்தில் பங்கு' என்ற உங்க கனவு, தி.மு.க., கூட்டணியில் இருக்கும் வரை நனவாகுமா என்பது, 'டவுட்' தான்! பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: அ.தி.மு.க., ஆட்சியில் பழனிசாமி முதல்வராக இருந்த போது, வன்னியர்களுக்கு, 10.5 சதவீதம் தனி இட ஒதுக்கீடு வழங்கப் பட்டது. தி.மு.க., ஆட்சியில், அதற்கு நீதிமன்றத்தில் தடையாணை பெற்று, தடுத்து விட்டனர். முதல்வர் ஸ்டாலினிடம் பல முறை வலியுறுத்தினோம்; நம் கோரிக்கைக்கு அவர் செவி சாய்க்கவில்லை. எனவே, வன்னியருக்கு தனி இடஒதுக்கீடு; ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி, வரும், டிச., 5ல், சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும். டவுட் தனபாலு: உங்க மகன் அன்புமணியும், இதே கோரிக்கைக்காக டிசம்பர், 17ல் சிறை நிரப்பும் போராட்டத்தை அறிவிச்சிருக்காரு... தனயனை முந்திக்கணும் என்பதால், நீங்க, 5ம் தேதியே எல்லா சிறைகளையும் நிரப்பி, அவங்களுக்கு இடமில்லாம பண்ண போறீங்களோ என்ற, 'டவுட்' தான் வருது! தமிழக துணை முதல்வர் உதயநிதி: தி.மு.க.,வில் இளைஞரணி, விவசாய அணி என, 25 அணிகள் உள்ளன. ஆனால், அ.தி.மு.க.,வில் பழனிசாமி, பன்னீர் செல்வம், சசிகலா, தினகரன் என்பது போல, 48 அணிகள் இருக்கின்றன. அ.தி.மு.க., என்ன செய்ய வேண்டும் என்பதை டில்லி முடிவெடுக்கிறது. டில்லி என்ன முடிவு எடுக்க வேண்டும் என்பதை, முதல்வர் ஸ்டாலின் நிர்ணயிக்கிறார். டவுட் தனபாலு: டில்லி என்ன முடிவு எடுக்க வேண்டும் என்பதை ஸ்டாலின் தான் நிர்ணயிக்கிறார்னு சொல்றீங்க... அப்படி என்றால், 'நீட்' தேர்வில் விலக்கு, பள்ளிக்கல்வித்துறைக்கு நிதி ஒதுக்கீட்டை எல்லாம் முதல்வரால ஏன் கேட்டு வாங்க முடியலை என்ற, 'டவுட்' வருதே!