கரூர் காங்., - எம்.பி., ஜோதிமணி: இந்திய தேர்தல் ஆணையம், பா.ஜ.,வுக்கு ஆதரவாக செயல்படுகிறது. கடந்த, 2014 லோக்சபா தேர்தலில், பா.ஜ., பெற்ற வெற்றி உண்மை. ஆனால், 2019, 2024 லோக்சபா தேர்தல்கள் உட்பட பல தேர்தல்களில் முறைகேடு செய்து தான் பா.ஜ., வெற்றி பெற்றுள்ளது. டவுட் தனபாலு: நீங்க சொல்றது உண்மை என்றாலும், 2024ல் பா.ஜ.,வுக்கு தனி பெரும்பான்மைக்கு தேவையான, 277 சீட்கள் கிடைக்காம, 240ல் தானே ஜெயிச்சாங்க... முறைகேடு செய்தவங்க, 300 சீட்கள் வெற்றிக்கு பண்ணியிருக்கலாமே... கர்நாடகா, தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தல்கள்ல காங்., தானே ஜெயிச்சிருக்கு... இதை எல்லாம் உணராம, பொத்தாம் பொதுவா முறைகேடுன்னு குற்றம் சாட்டுவது சரியா என்ற, 'டவுட்'தான் வருது! lll தமிழக கனிமவளத்துறை அமைச்சர் ரகுபதி: வெளி மாநிலங்களில் இருந்து, தமிழகம் வந்து வேலை பார்ப்போரின் எண்ணிக்கை, லட்சத்தில் இருந்து கோடியாக அதிகரித்துள்ளது. அவர்களுக்கு இங்கு ஓட்டளிக்க வாய்ப்பளிக்கும் போது, வடமாநில சூழ்நிலையை கருத்தில் கொண்டு ஓட்டளிக்க வாய்ப்புள்ளது. எனவே, தமிழக நிலவரம் தெரியாதவர்களை வாக்காளர்களாக சேர்க்கக்கூடாது என்பதே எங்களது கோரிக்கை. - டவுட் தனபாலு: அது சரி... வடமாநில வாக்காளர்கள், அவங்க மாநிலத்தில் நடக்கும் பா.ஜ., மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் ஆட்சியை போல, இங்கும் வரணும்னு நினைச்சு, பா.ஜ., அணிக்கு ஓட்டு போட்டுட்டா, 'திராவிட மாடல் பப்பு வேகாம போயிடும்'னு நீங்க பயப்படுவது, 'டவுட்' இல்லாம தெரியுது! lll தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்: தமிழக கள நிலவரம் நம்மை ஊக்குவிப்பதாக இருக்கிறது. நமது அடுத்த அடியை, இன்னும் நிதானமாகவும், தீர்க்கமாகவும் எடுத்து வைக்க வேண்டும். இத்தகைய சூழலில், கட்சியின் அடுத்தகட்ட தொடர் நிகழ்வுகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து விவாதிக்க, வரும் 5ம் தேதி மாமல்லபுரம் தனியார் நட்சத்திர ஹோட்டலில், காலை, 10:00 மணிக்கு சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடக்க உள்ளது. டவுட் தனபாலு: கட்சியினர் சந்திப்பு, பொதுமக்கள் சந்திப்பு எல்லாத்தையும், சென்னை, பனையூர் கட்சி அலுவலகத்தில் தான் நடத்துறீங்க... இந்த மாதிரி பொதுக்குழு, செயற்குழுவையும் மாமல்லபுரத்தில் தான் நடத்துறீங்க... இ.சி.ஆர்., சாலையை விட்டு கட்சியை வெளியில கொண்டு போகும் திட்டமே தங்களிடம் இல்லையோ என்ற, 'டவுட்'தான் வருது! lll