டவுட் தனபாலு
நடிகர் அஜித்குமார்: கூட்டத்தை சேர்ப்பது பெருமை என்ற மனப்பான்மை எல்லாருக்கும் உள்ளது. அதை ஊடகங்களும் தொடர்ச்சியாக பெரிதுபடுத்தி காட்டுவதால், கூட்டத்தின் மீது எல்லாருக்கும் ஈர்ப்பு ஏற்படுகிறது. கரூரில் அப்படிப்பட்ட ஈர்ப்பில் தான் கூட்டம் கூட்டப்பட்டது. இப்படி கூட்டம் கூட்டப்படும்போது, அங்கு மோசமான சம்பவங்கள் நடந்து விடுகின்றன. கரூரில் நடந்த சம்பவத்துக்கு தனிநபர் மட்டும் காரணமல்ல; பொறுப்பும் அல்ல. கூட்டமாக கூடிய ஒவ்வொருவரும் தான் பொறுப்பு. டவுட் தனபாலு: சபாஷ், சரியா சொன்னீங்க... கூட்டம்தான், 'மாஸ்' என்ற கருத்தை சினிமா நடிகர்கள் மனசுல பலரும் விதைச்சிட்டாங்க... அந்த மாயையில் தான் உங்க நண்பர் விஜயும் மாட்டிக்கிட்டார். அதேநேரம், சினிமா புகழை வேற எதற்கும் பயன்படுத்தாத உங்களை, 'டவுட்' இல்லாம பாராட்டலாம்! தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி: அ.தி.மு.க., பொதுச் செயலராக உள்ள பழனிசாமியை, முன்பு கொலை வழக்கில் இருந்து காப்பாற்றியவர் தான், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன். ஆனால், இன்று செங்கோட்டையனையே அ.தி.மு.க.,வில் இருந்து பழனிசாமி நீக்கி உள்ளார். அ.தி.மு.க., தொண்டர்கள் தற்போது எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இன்றி அனாதைகளாக உள்ளனர். அவர்கள், வந்து சேர வேண்டிய ஒரே இடம் தி.மு.க.,தான். அவர்களையும், அரவணைத்து செல்லக்கூடிய ஒரே தலைவர் ஸ்டாலின் தான். டவுட் தனபாலு: 'ஊரு ரெண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம்'னு கிராமங்கள்ல சொல்வாங்க... அந்த மாதிரி, கலங்கி கிடக்கும் அ.தி.மு.க., குளத்தில் துாண்டிலை வீசுறீங்க... ஆனா, தி.மு.க., எதிர்ப்பு என்பது, ரத்தத்துலயே ஊறிப்போன செங்கோட்டையன் மாதிரியானவங்க உங்க துாண்டில்ல சிக்குவாங்களா என்பது, 'டவுட்'தான்! நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப் பாளர் சீமான்: சட்டசபை தேர்தலில் நான் கூட்டணி வைத்தால், மூன்று, நான்கு சீட் கிடைக்கும். எங்களுக்கு வேண்டியது சீட்கள் அல்ல; தமிழகத்தை கைப்பற்று வோம். அதற்கு பொறுமை வேண்டும். கூட்டணிக்காக காலில் விழுந்து கிடக்க முடியாது. நாம் பதறாமல், தடுமாறாமல் இலக்கை நோக்கி பயணித்து கொண்டே இருப்போம். டவுட் தனபாலு: வாஸ்தவம் தான்... மூணு, நாலு சீட்டுக்காக கட்சியை அடகு வைக்க முடியாது என்ற உங்க தன்மானத்தை, 'டவுட்' இல்லாம பாராட்டலாம்... ஆனா, உங் களை நம்பி வந்த தம்பிகளை எப்ப தான் எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் ஆக்க போறீங்க என்ற 'டவுட்'டுக்கு உங்களிடம் விடை இருக்கா?