டவுட் தனபாலு
கரூர் காங்., - எம்.பி., ஜோதிமணி: கரூரில், தமிழக வெற்றிக் கழக கூட்டத்தில் நடந்த துயர சம்பவம் தொடர்பாக நடிகர் விஜயுடன், ராகுல் பேசியதை கூட்டணிக்கான அச்சாரம் என, சொல்லி விட முடியாது. த.வெ.க., தலைவர் விஜய், எங்களுக்கு புதியவர் இல்லை. 2010ல் காங்., - எம்.பி., ராகுலை சந்தித்து கட்சியில் சேருவது குறித்து விஜய் பேசினார்; ஆனால் காங்.,கில் இணையவில்லை. வரும் காலங்களில் என்ன நடக்கும் என்பதை இப்போதே கணித்து சொல்ல முடியாது. டவுட் தனபாலு: நல்லவேளை, உங்க கட்சியில் விஜய் சேரலை... அப்படி சேர்ந்திருந்தால், இப்ப உங்க கட்சியில் இருக்கும் ஆயிரத்தெட்டு கோஷ்டிகளில், விஜய் கோஷ்டின்னு ஒண்ணு கூடுதலா உருவாகியிருக்கும் என்பதில், 'டவுட்'டே இல்லை! lll மதுரை மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவரான, அ.தி.மு.க.,வை சேர்ந்த சோலைராஜா: ஆளுங்கட்சிக்குள் கோஷ்டி பூசல் இருப்பதால், மதுரை மேயரை நியமிக்காமல் உள்ளனர்; அதனால், மாமன்ற கூட்டங்களை நடத்த முடியவில்லை. மா.கம்யூ., கட்சியை சேர்ந்த துணை மேயர் நாகராஜனும், மாமன்ற கூட்டத்திற்கு அழைப்பு விடுக்காமல் இருப்பது, பணிகளில் தொய்வை ஏற்படுத்தி உள்ளது. அமைச்சர்கள் மூர்த்தி, தியாகராஜன் ஆகியோரது, 'ஈகோ' பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்து, விரைவில் புதிய மேயரை நியமிக்க வேண்டும். டவுட் தனபாலு: துணை மேயர் நாகராஜன், ஆளுங்கட்சி கூட்டணியில் இருப்பதால், தனித்து இயங்க யோசிக்கிறார் என்பது, 'டவுட்' இல்லாம தெரியுது... அதேநேரம், ஏற்கனவே அமைச்சர்களின் அதிகார மோதல்ல நொந்து போயிருக்கும் மதுரை மக்கள், சட்டசபை தேர்தல்ல தங்களது அதிருப்தியை காட்டுவாங்க என்பதிலும், 'டவுட்'டே இல்லை! lll பத்திரிகை செய்தி: மதுரையில் நடந்த தே.மு.தி.க., கூட்டத்திற்கு, 'அழையா விருந்தாளியாக' சென்ற அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உதயகுமாரை, பிரேமலதா மதிக்காமல் ஒரு மணி நேரம் காத்திருக்க வைத்து சந்தித்து உதாசீனப்படுத்தியதால், அ.தி.மு.க., நிர்வாகிகள் கொதிப்பில் உள்ளனர். டவுட் தனபாலு: அடடா... ஒரு காலத்தில் இவங்க கட்சி தலைவி ஜெ.,யை சந்திக்க, தேசிய கட்சிகளின் மூத்த டில்லி தலைவர்கள் பலரும், போயஸ் கார்டன்ல வந்து பல மணி நேரம் தவம் கிடப்பாங்க... இப்ப நிலைமை இப்படி ஆகிடுச்சே... 'யானை இளைச்சா எலிக்கு கொண்டாட்டம்' என்பது, 'டவுட்' இல்லாம தெரியுது! lll