உள்ளூர் செய்திகள்

 டவுட் தனபாலு

மா.கம்யூ., மாநில செயலர் சண்முகம்: தமிழக அரசுக்கு எதிராகவே, கவர்னர் ரவி, தன் முழு அதிகாரத்தையும் பயன்படுத்தி வருகிறார். அமலாக்கத்துறை, சி.பி.ஐ., உள்ளிட்டவற்றை வைத்து, எதிரிகளைக்கூட நண்பர்களாக மாற்றக்கூடிய, 'ரெய்டு'கள் தமிழகத்தில் அதிகம் நடக்க வாய்ப்புள்ளன. பா.ஜ.,வை எதிர்ப்பதற்காகவே தி.மு.க.,வுடன் கைகோர்த்துள்ளோம். அதனால் ஆட்சி, அதிகாரத்தில் பங்கு கேட்க மாட்டோம். டவுட் தனபாலு: கேரளா தவிர மற்ற எல்லா மாநிலங்கள்லயும் உங்க கட்சி எங்க இருக்குன்னு, 'லென்ஸ்' வச்சுதான் தேடணும்... உங்க கட்சியின் செல்வாக்கு ஊரறிந்த ரகசியம் என்பதால் தான், 'சீச்சீ... இந்த பழம் புளிக்கும்' என்ற கதையாக, 'ஆட்சி, அதிகாரத்தில் பங்கு கேட்க மாட்டோம்'னு நழுவுறீங்க என்பது, 'டவுட்' இல்லாம தெரியுது! lll அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன்: தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டசபை தேர்தலில், அ.ம.மு.க., சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்புவோர், தங்களுடைய விருப்ப மனுக்களை, சென்னை, அடையாறில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில், வரும் 10 முதல் 18ம் தேதி வரை பெறலாம். டவுட் தனபாலு: ஆனானப்பட்ட அ.தி.மு.க., - தி.மு.க., போன்ற பெரிய கட்சிகளே, இன்னும் விருப்ப மனு வாங்கும் பணிகளை துவங்கலை... ஊருக்கு முந்திக்கிட்டு விருப்ப மனுக்களை வாங்குறாரே... இவரே நிறைய ஆட்களை ஏற்பாடு பண்ணி, விருப்ப மனுக்களை குடுக்க வச்சு, தன் கட்சியிலும் ஆட்கள் இருக்காங்கன்னு காட்டிக்க நினைக்கிறாரோ என்ற, 'டவுட்'தான் வருது! lll தமிழக பா.ஜ., தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி: 'தமிழை வளர்க்க, மத்திய அரசு என்ன செய்தது' என, தமிழக துணை முதல்வர் உதயநிதி கேட்கிறார். ஆனால், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு எழுதிய 85,000 பேர், தமிழ் மொழி தேர்வில் தோல்வி அடைந்திருப்பது, தி.மு.க., ஆட்சியின் அலங்கோலத்தை காட்டுகிறது. தமிழை காட்டுமிராண்டி மொழி என குறிப்பிட்ட ஈ.வெ.ரா.,வை வழிகாட்டி என மார்தட்டி கொள்வோர், தமிழை வளர்ப்பது குறித்து எப்படி சிந்திப்பர்? டவுட் தனபாலு: அதானே... 'தமிழில் பெயர் பலகைகள் இல்லாத வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்'னு அரசு வெளியிட்ட அறிவிப்பே காத்தோடு போயிடுச்சே... பெயர் பலகைகளில் தமிழ் கட்டாயம் என்ற நிலையை கொண்டு வர முடியாதவங்க, தமிழை வளர்க்க நடவடிக்கை எடுப்பாங்களா என்பது, 'டவுட்'தான்! lll


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ