உள்ளூர் செய்திகள்

 டவுட் தனபாலு

தமிழக பா.ஜ., இளைஞரணி தலைவர் எஸ்.ஜி.சூர்யா: 'கார்த்திகை தீபத்தை கலவர தீபமாக மாற்ற, மதவெறி சக்திகள் முயற்சிக்கின்றன' என, மா.கம்யூ., கட்சியின் மதுரை எம்.பி., வெங்கடேசன் கூறியுள்ளார். கார்த்திகை தீபம் என்பது மங்களத்தின் அடையாளம். அதை கலவர தீபம் என அழைக்கலாமா? பிற மத பண்டிகைகளுக்கு முதல் ஆளாக ஓடிச்சென்று வாழ்த்து தெரிவிக்கும் உங்கள் நாக்கு, ஹிந்து பண்டிகையை கலவரம் என முத்திரை குத்துவது ஏன்? டவுட் தனபாலு: அது சரி... மற்ற மதத்தினரை பகைச்சுக்கிட்டா, தேர்தல் நாளில், 'வேலை'யை காட்டிடுவாங்களே... ஹிந்துக்கள் மட்டும் தானே, 'மறப்போம்; மன்னிப்போம்'னு, வெங்கடேசன் மாதிரியான ஆட்களை திரும்ப திரும்ப எம்.பி.,யாக்குறாங்க... அதனால, அவர் இதுவும் பேசுவார்; இன்னமும் பேசுவார் என்பதில், 'டவுட்'டே இல்லை! பத்திரிகை செய்தி: விஜயின், தமிழக வெற்றிக் கழகம் கட்சியால், தங்களுக்கு வரும் ஓட்டுகள் சிதறலாம் என்பதை கணித்துள்ள தி.மு.க., தலைமை, அதை சரிக்கட்ட தே.மு.தி.க.,வை தங்கள் கூட்டணிக்கு இழுக்க முயன்றது. இதை அறிந்ததும், தே.மு.தி.க., தலைமையிடம், பா.ஜ., மேலிட தலைவர்கள் பேச்சு நடத்தியுள்ளனர். அப்போது, தே.மு.தி.க.,வுக்கு 20 சட்டசபை தொகுதிகளுடன், ராஜ்யசபா எம்.பி., பதவி கிடைக்க பா.ஜ., உதவுவதாக கூறியுள்ளனர். இதற்கு, தே.மு.தி.க., தலைமை உடன்பட தயாராக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. டவுட் தனபாலு: தே.மு.தி.க.,வின் இப்போதைய பலத்துக்கு, 20 எம்.எல்.ஏ., சீட்கள், ராஜ்யசபா எம்.பி., பதவி ரொம்ப அதிகமா தெரியுதே... ஒருவேளை, 'பா.ஜ., கூட்டணியில் இப்படி, 'ஆபர்' தர்றாங்க... இதை விட அதிகமா தந்தா, உங்க அணிக்கு வரத் தயார்'னு தி.மு.க.,வுக்கு நுால் விட்டு பார்க்கிறாங்களோ என்ற, 'டவுட்' தான் வருது! அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன்: சட்டசபை தேர்தலில் தி.மு.க., கூட்டணிக்கு எதிராக, நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி தலைமையில் கூட்டணி அமைந்தால் கடும் போட்டி இருக்கும். தி.மு.க.,வை எதிர்த்து வீழ்த்தும் திறன் அ.தி.மு.க.,வுக்கு இல்லை; இதற்கு, அதன் பொதுச்செயலர் பழனிசாமியே காரணம். டவுட் தனபாலு: ஒரு பேச்சுக்கு வச்சுக்குவோம்... தினகரன், பன்னீர்செல்வம், சசிகலா எல்லாரையும் அ.தி.மு.க.,வில் பழனிசாமி சேர்த்திருந்தால் என்ன நடந்திருக்கும்... 'தி.மு.க.,வை வீழ்த்தும் ஒரே பலமான கட்சி அ.தி.மு.க., மட்டுமே'ன்னு இவரே முழங்கியிருப்பார் என்பதில், 'டவுட்'டே இல்லை!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ