தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் கோவி.செழியன்: தமிழக மக்களையே வென்றெடுக்க முடியாத த.வெ.க., தலைவரும், நடிகருமான விஜய், புதுச்சேரி மக்களை வென்றெடுப்பேன் என்று கூறி உள்ளார். அவர் பேசுவது, கூரையேறி கோழி பிடிக்காதவர், வானம் ஏறி வைகுண்டம் போவேன் என்பது போல உள்ளது. முதலில் அவர் தேர்தலில் நிற்கட்டும்; சில இடங்களில் வென்று காட்டட்டும். அதன்பின், தமிழகத்தில் ஆட்சி அமைக்கட்டும். அதையடுத்து, புதுச்சேரிக்கு செல்லட்டும். ஆசைக்கு அளவில்லை என்பதற்கு அடையாளம், நடிகர் விஜய் தான். டவுட் தனபாலு: ஆசைப் படுறதுக்கு எல்லாருக்கும் உரிமை இருக்கு... உங்க தலைவர் ஸ்டாலின் கூடத்தான், 'வர்ற சட்டசபை தேர்தலில், 200 தொகுதிகளில் ஜெயிப்போம்'னு அடிக்கடி சொல்றாரு... இது பேராசை இல்லையா என்ற, 'டவுட்' வருதே! தமிழக முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம்: என் தலைமையிலான அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்பு கழகம், அ.ம.மு.க., ஆகியவற்றை, தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைப்பது குறித்து, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை முயற்சிகள் எடுத்து வருகிறார். இதற்காக, எங்களோடும், பா.ஜ., தலைமையோடும் அவர் பேசி இருக்கிறார்; விரைவில் நல்ல முடிவு கிடைக்கும். டவுட் தனபாலு: சரியா போச்சு... அண்ணாமலை என்றாலே அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமிக்கு ஆகாது... அவரால தான், 2024 லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி முறிஞ்சதுன்னு அவர் நினைக்கிறாரு... இதனால, அண்ணாமலை முயற்சிகளுக்கு பழனிசாமி பச்சைக்கொடி காட்டுவாரா என்பது,'டவுட்'தான்! தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை: காங்கிரஸ் கட்சிக்கு கொல்லைப்புற அரசியல் செய்ய தெரியாது; பா.ஜ., தான் கொல்லைப்புறம் வழியாக கூட்டணி பேசுகிறது. ஒரு பக்கம் பழனிசாமியுடன் பேசி கூட்டணி அமைக்கிறது. இன்னொரு பக்கம், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை டில்லிக்கு தனியாக அழைத்து பேச்சு நடத்தியது. இதனால், அவரும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு, த.வெ.க.,வில் இணைந்து விட்டார். டவுட் தனபாலு: உங்க கட்சியிலும் கூடத்தான், தி.மு.க.,விடம் தொகுதி பங்கீடு பற்றி பேச, ஒருபக்கம் ஐவர் குழுவை நியமிச்சாங்க... மறுபக்கம், உங்க கட்சி நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி என்பவரை, த.வெ.க., தலைவர் விஜயை சந்திச்சு பேச வைக்கிறாங்க... இது, கொல்லைப்புற அரசியல் இல்லையா என்ற, 'டவுட்' வருதே!