உள்ளூர் செய்திகள்

 டவுட் தனபாலு

பா.ஜ., சிறுபான்மையினர் அணி தேசிய செயலர் வேலுார் இப்ராஹிம்: தமிழக வெற்றிக் கழகத்திற்கு, 15 முதல்- 18 சதவீத ஓட்டுகள் இருப்பதாக பேசி வருகின்றனர். இந்த ஓட்டுகளை வைத்து, விஜயால் தி.மு.க., வெற்றிக்கு மறைமுகமாக உதவ முடியுமே தவிர, வீழ்த்த முடியாது. எனவே, தி.மு.க.,வை வீழ்த்த வேண்டும் என்றால், பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணியில் த.வெ.க., இணைய வேண்டும். இல்லாவிட்டால், கமலுக்கு ஏற்பட்ட நிலை தான் விஜய்க்கும் ஏற்படும். அடுத்து வரும் லோக்சபா தேர்தலில், விஜய்க்கு தி.மு.க., நிச்சயமாக ஒரு எம்.பி., 'சீட்' கொடுக்கும். டவுட் தனபாலு: நீங்க சொல்ற மாதிரியே, சட்டசபை தேர்தலில் த.வெ.க., தோற்று போயிட்டாலும், தி.மு.க., பக்கம் தான் விஜய் கட்சி போகும்னு அடித்து சொல்றீங்களே... ஒருவேளை, 2029 லோக்சபா தேர்தலின்போது, பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணிக்கு விஜய் வந்தால், சேர்த்துக்க மாட்டீங்களோ என்ற, 'டவுட்'தான் வருது! அன்புமணி அணியின் பா.ம.க., செய்தி தொடர்பாளர் பாலு: சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்பும் பா.ம.க.,வினர், தினமும் திருவிழா போல சென்னை, பனையூர் வந்து, அன்புமணி அலுவலகத்தில் விருப்ப மனு அளித்து வருகின்றனர். இதை, ராமதாஸ் அணியினரால் தாங்க முடியவில்லை. ராமதாஸ் -- அன்புமணி இடையே சமரசம் ஏற்படுத்த முயற்சித்ததாக, ஜி.கே.மணி கூறுகிறார். ஆனால், ராமதாசை பலமுறை சந்தித்தவர், அன்புமணியை ஒருமுறைகூட சந்திக்கவில்லை. டவுட் தனபாலு: '2004ம் ஆண்டு, அன்புமணிக்கு மத்திய அமைச்சர் பதவி வாங்கி கொடுக்க ராமதாஸ் தயங்கியபோது, நான் தான் வலியுறுத்தி அன்புமணியை மத்திய அமைச்சராக்கினேன்' என்றும் ஜி.கே.மணி சொல்லியிருந்தாரே... அது உண்மையா, பொய்யான்னு நீங்க சொல்லாதது ஏன் என்ற, 'டவுட்' வருதே! தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் பொதுச்செயலர் ஆனந்த்: விஜயை தமிழக முதல்வராக்க, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செங் கோட்டையன், த.வெ.க.,வுக்கு வந்தது மிகவும் மகிழ்ச்சி. செங்கோட்டையனுக்கு கட்சியில் பொறுப்பு கொடுத்து விட்டோம்; கொங்கு மண்டலத்தில், 70 தொகுதிகளில் வெற்றி பெற்று தருவது அவரது பொறுப்பு. டவுட் தனபாலு: 'செங்கோட்டையன் வசம் இருக்கும், 70 சட்டசபை தொகுதிகளில் வெற்றி பெற்று தருவது அவரது பொறுப்பு'ன்னு சுமையை தலையில் துாக்கி வைக்கிறீங்களே... ஒருவேளை, அவரால அந்த வெற்றியை ஈட்ட முடியவில்லை என்றால், அவரது கட்சி பதவியை பறிச்சிடுவீங்களோ என்ற, 'டவுட்' வருதே!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

D.Ambujavalli
டிச 18, 2025 06:16

செங்கோட்டையன் இணைந்ததில் தன் முக்கியத்துவம் குறைந்துவிட்டதோ என்ற லேசான மனக்குமுறலை வந்தவுடனே அவரைத் தூக்கி வைத்துவிட்டீர்கள், ‘அவர் 70 இடம் ஜெயித்துக் காட்டட்டும், ‘ என்று விஜய்க்கு விடும் சவாலாகவும் கொள்ளலாம்


புதிய வீடியோ