அ.தி.மு.க.,வைச் சேர்ந்த, சுகாதாரத்துறை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்: 'ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகள் போன்றவற்றில் டாக்டர்கள், நர்ஸ்கள், மருத்துவ பணியாளர்கள் பணியில் இல்லை' என, மக்கள் புலம்புகின்றனர். 1,100 டாக்டர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்குமாறு, நவ., 21ல், மருத்துவ பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. ஆனால், 'சுகாதார துறையில் காலிப்பணியிடமே இல்லை' என, அமைச்சர் சுப்பிரமணியன் கூறுகிறார். டவுட் தனபாலு: அதாவது, 1,100 டாக்டர் பணியிடங்களுக்கும் எப்பவோ டாக்டர்களை தேர்வு பண்ணி முடிச்சிருப்பாங்க... விண்ணப்பங்கள் வாங்குறது எல்லாம் வெறும் கண்துடைப்பா இருக்கும்... அதனால தான், 'காலிப்பணியிடங்களே இல்லன்னு அமைச்சர் சொல்றாரோ' என்ற, 'டவுட்' உங்களுக்கு வரலையா? தி.மு.க., தலைமை அலுவலகம் அறிக்கை: மகளிர் உரிமைத் தொகை, இலவச பஸ் பயணம், புதுமை பெண், தோழி விடுதி உட்பட பல நலத்திட்டங்களை, மகளிர் மேம்பாட்டுக்காக, முதல்வர் ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். இதனால், வரும் 29ம் தேதி மாலை, 4:00 மணிக்கு, திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில், 'வெல்லும் தமிழ் பெண்கள்' என்ற பெயரில், தி.மு.க., மேற்கு மண்டல மகளிர் அணியின் மாநாடு நடக்க உள்ளது. தி.மு.க., துணை பொதுச்செயலர் கனிமொழி தலைமை வகிக்க உள்ளார். முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று பேசுகிறார். டவுட் தனபாலு: இப்பதான், திருவண்ணாமலையில், வடக்கு மண்டல இளைஞர் அணி நிர்வாகிகள் மாநாட்டை, உதயநிதி நடத்தி முடிச்சிருக்கார்... இதனால, உதயநிதி மாநாட்டுக்கு போட்டியா, லட்சக்கணக்கான மகளிரை திரட்டி, முதல்வரை அசத்த கனிமொழி முடிவு பண்ணிட்டாங்களோ என்ற, 'டவுட்'தான் வருது! பத்திரிகை செய்தி: பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தால், தன் தரப்பினர் போட்டியிடும் தொகுதிகளில் தேர்தல் பணிகளை பார்க்காமல், அ.தி.மு.க.,வினர் தோற்கடித்து விடுவர் என அச்சப்பட்டு, அக்கூட்டணியில் இணைய முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தயக்கம் காட்டுவதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன. டவுட் தனபாலு: அவர் தயங்குவதிலும் அர்த்தம் இருக்கு... பன்னீர்செல்வம் அணியினர் ஜெயித்து வந்தால், துணை முதல்வர், அமைச்சர் பதவிகள் கேட்டு தொந்தரவு பண்ணுவாங்க என்பதால், தேர்தல் களத்திலேயே, அவங்க காலை வாரிவிட அ.தி.மு.க., வினர்காத்துட்டு இருப்பாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!