தமிழக வெற்றிக் கழகம் கட்சியின், தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனா: தி.மு.க., ஆட்சியின் ஊழலால், மக்கள் தினமும் பாதிக்கப்படுகின்றனர். தி.மு.க.,வினர், சமீபத்தில் இளைஞர் அணி மாநாடு நடத்தினர். இதில், முதல்வர் ஸ்டாலின் மகன் உதயநிதிக்கு, இளம் ஈ.வெ.ரா., என்ற பட்டத்தை சூட்டியுள்ளனர். சமூக நீதி பற்றி தெரியாதவருக்கு இளம் ஈ.வெ.ரா., பட்டம் எதற்கு? டவுட் தனபாலு: ஏற்கனவே உதயநிதிக்கு, 'இளைய கருணாநிதி' என்ற பட்டத்தை குடுத்தாச்சு... இப்ப, இளம் ஈ.வெ.ரா., பட்டத்தை சூட்டியிருக்காங்க... அடுத்து, 'இளைய அண்ணாதுரை' மட்டும் தான் பாக்கி... அதையும், அடுத்த மண்டல இளைஞர் அணி மாநாட்டில் கண்டிப்பா குடுத்துடுவாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை! தமிழக வெற்றிக் கழகம் கட்சி தலைவர் விஜய்: நம்மை பெற்ற தாய், நமக்கு கொடுக்கும் தைரியத்தை வேறு யாரும் தர முடியாது. அப்படி ஒரு தைரியத்தை, தமிழக மக்கள் எனக்கு கொடுத்திருக்கிறீர்கள். இதை பிரிப்பதற்காக, சூழ்ச்சிக்கார கூட்டங்கள் முயற்சிக்கின்றன. அவர்களுக்கு தெரியாது, இது இன்றைக்கு வந்த உறவு அல்ல... நான் சினிமாவுக்கு, 10 வயதில் வந்தபோது, 'ஸ்டார்ட்' ஆன உறவு; 33 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும் உறவு. டவுட் தனபாலு: கிட்டத்தட்ட, 33 வருஷங்களா தமிழக மக்களுடன் உறவுல இருக்கிறதா சொல்றீங்களே... நீங்க அரசியலுக்கு வர்றதுக்கு முன்னாடி எல்லாம், தமிழகத்துல எத்தனையோ பிரச்னைகள், போராட்டங்கள் எல்லாம் நடந்துச்சே... அப்ப எல்லாம், தமிழ் உறவுகளுக்கு ஆறுதல் சொல்லாம எங்க போயிருந்தீங்க என்ற, 'டவுட்' வருதே! தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன்: தி.மு.க., ஆட்சியில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், 50 சதவீதம் அதிகரித்துள்ளன. போதை பழக்கத்தால் கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம் என, அனைத்து குற்ற சம்பவங்களும் பெருகி விட்டன. தமிழக அமைச்சர்கள் அனைவரும் ஊழலில் திளைத்துள்ளனர். தி.மு.க., அமைச்சர்கள், 17 பேர் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது; அவர்கள் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம். டவுட் தனபாலு: தமிழகத்தில் மொத்தம், 35 அமைச்சர்கள் இருக்காங்க... இதுல, 17 பேர் மட்டும் தான் ஊழல்ல ஈடுபட்டிருக்காங்களா... 'மீதம், 18 அமைச்சர்களும் நேர்மையா செயல்படுறாங்க'ன்னு சொல்ல வர்றீங்களா அல்லது, 'அவங்க மேலயும் அடுத்தடுத்து அமலாக்கத்துறை வழக்கு தொடரும்'னு சொல்ல வர்றீங்களா என்ற, 'டவுட்' வருதே!