உள்ளூர் செய்திகள்

 டவுட் தனபாலு

அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி: ஜெயலலிதா முதல்வராக இருந்த போதுதான், தமிழர்கள் அனை வரும் கொண்டாடும் வகையில், பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. 2021ல், நான் முதல்வராக இருந்தபோது, அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் தலா, 2,500 ரூபாய் வழங்கினேன். அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின், '5,000 ரூபாய் வழங்க வேண்டும்' என, கூறினார். இப்போது அவரே முதல்வராக இருப்பதால், பொங்கல் பரிசாக, 5,000 ரூபாய் வழங்க வேண்டும். டவுட் தனபாலு: அதெப்படி... அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி இருந்த விலைவாசியா இப்ப இருக்கு... அப்பவே, 5,000 ரூபாய் வழங்க சொன்ன ஸ்டாலின், இப்ப, 10,000 ரூபாய் தரணும்னு நீங்க கேட்க வேண்டாமா... எதிர்க்கட்சி தலைவரான உங்களிடம் இருந்து, மக்கள் இன்னும் நிறைய எதிர்பார்க்கிறாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை! இந்திய கம்யூ., மாநில செயலர் வீரபாண்டியன்: எத்தனை கட்சிகள் வந்தாலும், தமிழகத்தில் தி.மு.க., கூட்டணி தான் வெல்லும். கூட்டணியின் பலம் மட்டும் அதற்கு காரணம் அல்ல. தமிழக அரசு செயல்படுத்தும் நலத் திட்டங்களும் காரணம். தி.மு.க., தீய சக்தி அல்ல; ஜனநாயக சக்தி. நாங்கள் கூடுதல் இடங்களை கேட்டாலும், தமிழக முதல்வர் அதை விரோதமாக எடுத்துக்கொள்ள மாட்டார். எங்களை, உள்ளும் புறமும் நன்கு அறிந்தவர் முதல்வர். டவுட் தனபாலு: உங்களை உள்ளும், புறமும் முதல்வர் நன்கு அறிந்தவர் என்பது தான், உங்களுக்கு பிரச்னையே... தொகுதிக்கு சில நுாறு ஓட்டுகள் மட்டுமே இருக்கும் உங்க கட்சிக்கு குறைவான தொகுதிகளை முதல்வர் ஒதுக்குவதும் அதனால் தான் என்பதில், 'டவுட்'டே இல்லை! திரிணமுல் காங்., கட்சி தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி: மேற்கு வங்கத்தில், வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகளில், பெரும் தவறுகள் அரங்கேறியுள்ளன. பா.ஜ.,வின் நலனை காக்க, மாநில அரசுக்கு தெரிவிக்காமல் தேர்தல் கமிஷன் செயல்பட்டுள்ளது. வரைவு பட்டியலில், தகுதி வாய்ந்த லட்சக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. டவுட் தனபாலு: மேற்கு வங்கத்தில் தொடர்ந்து, 15 ஆண்டுகளா நீங்க முதல்வரா இருக்கீங்க... உங்க ஆட்சி மீது மக்கள் கடும் அதிருப்தியில் இருக்காங்க... வர்ற தேர்தலில், ஆட்சி மாற்றம் உறுதி என்பதை இப்பவே கணிச்சிட்ட நீங்க, தோல்விக்கு காரணம் தேடுறீங்களோ என்ற, 'டவுட்'தான் வருது!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை