உள்ளூர் செய்திகள்

 டவுட் தனபாலு

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன்:

என்னை பார்த்து பலரும், 'செங்கோட்டையன் எங்கு சென்று சேர்ந்துள்ளார், பாருங்கள்' என கூறினர். ஆனால், நான் சேர்ந்துள்ள இடம், கோட்டைக்கு செல்லும் இடமாக உள்ளது. எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதாவை தொடர்ந்து, மக்கள் செல்வாக்கு மிகுந்த மூன்றாவது தலைவரோடு பணியாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. தமிழகத்தில் புதிய வரலாறு உருவாகப் போகிறது. டவுட் தனபாலு: த.வெ.க., கட்சி கண்டிப்பா கோட்டைக்கு போகும்னு தெரிஞ்சு அந்த கட்சியில் சேர்ந்தீங்களா அல்லது, 'நான் அங்க சேர்ந்துட்டதால, அந்த கட்சியை கோட்டைக்கு அழைச்சிட்டு போயிடுவேன்' என்ற அபார தன்னம்பிக்கையில் பேசுறீங்களா என்ற, 'டவுட்'தான் வருது!

பா.ஜ., சிறுபான்மை பிரிவு தேசிய செயலர், வேலுார் இப்ராஹிம்:

வரும் சட்டசபை தேர்தலில், தி.மு.க., எதிர்ப்பு ஓட்டுகளை நடிகர் விஜய் பிரிக்கக் கூடாது. அவர், பா.ஜ.,வின் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வர வேண்டும். இல்லையென்றால், அவர் மோசமான தோல்வியை சந்திப்பார்; இதை அரசியலுக்காகவோ, விளையாட்டாகவோ சொல்லவில்லை. அவருடைய நன்மைக்காக சொல்கிறேன். அவர் இந்த விஷயத்தில் நன்கு சிந்தித்து முடிவெடுப்பார் என நம்புகிறேன் . டவுட் தனபாலு: 'தே.ஜ., கூட்டணிக்கு விஜய் வராமல் போனால், கடும் பின்விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்' என்ற மிரட்டலை தான், 'மோசமான தோல்வியை சந்திப்பார்'னு நாசுக்கா சொல்றீங்களோ என்ற, 'டவுட்'தான் வருது!

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்:

'அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியின் பெயரை சொல்லவே வெட்கமாக உள்ளது' என, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் கூறியது பற்றி நான் எதுவும் கூற முடியாது. அவர், தன் கருத்தை கூறியுள்ளார். அவரை மீண்டும் அ.தி.மு.க.,வில் இணைப்பது குறித்து, கட்சி தலைமை முடிவெடுக்கும். டவுட் தனபாலு: பழனிசாமியை விமர்சித்தவருக்கு ஆவேசமா பதிலடி தராம, அடக்கி வாசிக்கிறீங்களே... பா.ஜ., மேலிடம் தந்த ஆலோசனையை ஏற்று, பன்னீர்செல்வத்தை மறுபடியும் அ.தி.மு.க.,வில் சேர்க்க உங்க கட்சி தலைமை முடிவு எடுத்துடுச்சோ என்ற, 'டவுட்' வருதே! lll


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Anantharaman Srinivasan
டிச 29, 2025 11:36

இறுதிவரை பன்னீர்செல்வம் பாஜக கூட்டணிக்கு வராமல் போனால், அதிமுக ஜெயகுமார் மட்டுமல்ல மொத்தபேரும் பன்னீர் மீது வசைபாட தொடங்குவார்கள்.


Ambika. K
டிச 29, 2025 06:40

50 சீட்டு தேறினால் கட்சியில் தொடருவார். இல்லை என்றால் த வெ க என்னும் பெயரில் திராவிடம் என்னும் சொல்லே இல்லை. ஆகவே கட்சியை விட்டு விலகுகிறேன். செங்கோட்டையன் அறிக்கை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை